மீண்டும் வில்லனாகும் இயக்குனர் செல்வராகவன்


மீண்டும் வில்லனாகும் இயக்குனர் செல்வராகவன்
x
தினத்தந்தி 6 Jan 2022 6:04 PM GMT (Updated: 6 Jan 2022 6:04 PM GMT)

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் மீண்டும் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்துமுடித்துள்ள செல்வராகவன், விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் புதிய படத்திற்கு செல்வராகவன் கதநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தை  ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story