போலி அறிக்கை... வழக்கு தொடரும் சூர்யா


போலி அறிக்கை... வழக்கு தொடரும் சூர்யா
x
தினத்தந்தி 10 Jan 2022 6:15 PM GMT (Updated: 10 Jan 2022 6:15 PM GMT)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பாராட்டி அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளன. இந்த நிலையில் நடிகர் சூர்யா பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதற்காக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்தத் தீர்ப்பானது கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அறிக்கையில் சூர்யாவின் கையெழுத்தும் இடம்பெற்று இருந்தது. ஆனால் இந்த அறிக்கையை சூர்யா வெளியிடவில்லை என்றும் அவரது கையெழுத்துடன் போலியாக வெளியாகி உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலி அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடர சூர்யா முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா சார்பில் அவரது 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கூறும்போது, சூர்யா பெயரில் வெளியானது போலி அறிக்கை என்றும் அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story