பொன் மாணிக்கவேல்


பொன் மாணிக்கவேல்
x
தினத்தந்தி 26 July 2018 10:45 PM IST (Updated: 26 July 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா படத்தின் பெயர், ‘பொன் மாணிக்கவேல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தை நேமிசந்த் ஜபக் வழங்க, வி.ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார். கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார், ஏ.சி.முகில் செல்லப்பன். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘எல்லாவற்றிலும் நேர்மையாக தன் கடமையை செய்ய நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சம்பவம், அவருடைய வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. யதார்த்தமான ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையையும், அதே சமயம் சமகாலத்தில் நிகழும் முக்கியமான ஒரு குற்றத்தை பற்றியும் படம் பேசுகிறது.

முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறும் கதை, இது. கதையை கேட்டு முடித்ததும், ரொம்ப பிடித்து இருப்பதாக பிரபுதேவா கூறினார். தினமும் ‘ஜிம்’முக்கு சென்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார். பிரபுதேவா படம் என்றாலே அவருடைய ரசிகர்கள் நடனத்தை எதிர்பார்ப்பார்கள். அப்படி ஒரு பாடலும், நடனமும் படத்தில் இடம்பெற இருக்கிறது.

பொதுவாகவே எல்லா கதாநாயகர்களின் திரையுலக வாழ்க்கையிலும் போலீஸ் வேடம், அவர்களுக்கு திருப்புமுனையாக அமையும். பிரபுதேவாவுக்கு அப்படி ஒரு திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தி கொடுக்கும். படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டைரக்டர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

‘பாகுபலி’ படத்தில் நடித்த காலகேயா பிரபாகர், வில்லத்தனம் கலந்த குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார். கு.ஞானசம்பந்தம், முகேஷ் திவாரி, நடிகர் நாகேசின் பேரன் பீஜேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஜே.கண்ணன் வசனம் எழுதியிருக்கிறார். சம்பவங்கள் முழுவதும் சென்னையில் நடை பெறுவது போல் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற இருக்கிறது.’’
1 More update

Next Story