ரூ.1.20 கோடி மோசடி தமிழ்பட வில்லன் நடிகர் கைது


ரூ.1.20 கோடி மோசடி தமிழ்பட வில்லன் நடிகர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2019 5:11 AM IST (Updated: 11 Sept 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தில் வில்லனாக நடித்தவர் பிரசாந்த் நாராயணன் (வயது 50). இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார்.

பன்னீர் செல்வம் இயக்கிய ‘நான்தான் சிவா’ என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் வெளியாகவில்லை. இந்தியிலும் அதிகமான படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கிறார். பிரசாந்த் நாராயணன் கடந்த 2017-ம் ஆண்டு மலையாள படமொன்றில் நடித்து இருந்தார். இந்த படத்தை தயாரித்த தாமஸ் பணிக்கருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

அவரிடம், மும்பையில் தனது மாமனார் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்துவதாகவும் அதில் முதலீடு செய்தால் உங்களை அந்த நிறுவனத்துக்கு இயக்குனர் ஆக்குகிறேன் என்றும் பிரசாந்த் நாராயணன் கூறியுள்ளார். அதை நம்பிய தாமஸ் பணிக்கரிடம் இருந்து பிரசாந்த் நாராயணனும் அவரது மனைவி சோனாவும் ரூ.1 கோடியே 20 லட்சம் பெற்று, பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தாமஸ் பணிக்கர் கேரள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரசாந்த் நாராயணனையும் அவரது மனைவி சோனாவையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 20-ந்தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த மோசடி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story