வைகை எக்ஸ்பிரஸ்


வைகை எக்ஸ்பிரஸ்
x
தினத்தந்தி 24 March 2017 11:10 PM GMT (Updated: 24 March 2017 11:10 PM GMT)

சென்னையில் இருந்து மதுரை புறப்படும் ரெயிலில் நடிகையாக இருக்கும் இனியா, ஜமீன் குடும்பத்தை சேர்ந்த நீது சந்திரா, எம்.பி.யின் உறவுப்பெண்,

கதையின் கரு: ரெயில் கொலைகளை துப்பறியும் அதிகாரி.

 மனநலம் பாதித்த இளைஞன், இளம் மருத்துவ குழுவினர் ஆகியோர் பயணப்படுகின்றனர். அவர்களுடன் ஒரு பயங்கரவாதியும் இருக்கிறார். அந்த ரெயிலில் இரவு நேரத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன.

எம்.பி.யின் உறவுப்பெண் தூக்கில் பிணமாக தொங்குகிறாள். பெண் நிருபரை கொன்று தண்டவாளத்தில் வீசுகின்றனர். நீது சந்திரா ரத்த வெள்ளத்தில் குற்றுயிராக கிடக்க-அவர் அருகில் கையில் கத்தியுடன் மனநலம் பாதித்த இளைஞன் நிற்கிறான். போலீஸ் அதிகாரி நாசர் விசாரணையில் இறங்குகிறார். அவரால் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை.

இதனால் ரெயில்வே பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த ஆர்.கே. சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு துப்பு துலக்குகிறார். இரு பெண்களை கொன்றவர்களை கண்டுபிடிக்கிறார். நீது சந்திராவை கொல்ல முயற்சி செய்த நபரை பிடிக்க ரெயிலில் பயணித்தவர்களை அதே ரெயிலில் மீண்டும் அழைத்து செல்கிறார். அவர் குற்றவாளியை பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

பயங்கரவாத தடுப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் ஆர்.கே. கம்பீரமாக வருகிறார். விழிகளை உருட்டி மிரட்டி மிடுக்காக அவர் விசாரணை நடத்தும் தொனி ரசிக்க வைக்கிறது. தன்னை மிரட்டும் உயரதிகாரியிடம் பவ்வியமாக பேசி அவர் கொலையாளி என்று ஆதாரங்களை அடுக்கி வாய்மூட வைப்பது அதிர வைக்கிறது. தூக்கில் தொங்கிய பெண் வழக்கை தற்கொலை என்று போலீஸ் முடிக்க-அது கொலை என்று தர்க்கம் செய்து, செல்வாக்கான அந்த கொலையாளியை சாதுர்யமாக சிக்கவைப்பது விறுவிறுப்பூட்டுகிறது. நீது சந்திரா கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பது இருக்கை நுனிக்கு இழுக்கிறது. ரெயிலில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டையில் ஹாலிவுட் மிரட்டல்.

நீது சந்திரா அக்காள், தங்கை என்று இரு வேடங்களில் வருகிறார். அக்காள் தோற்றத்தில் அவரது இன்னொரு முகம் மிரள வைக்கிறது. இனியா நடிகையாக வருகிறார். நடிக்க வாய்ப்பு இல்லை. நகைச்சுவை போலீஸ் அதிகாரியாக நாசர் சிரிக்க வைக்கிறார். டிக்கெட் பரிசோதகராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ரெயில் பயண காட்சிகளை கலகலப்பாக வைத்து இருக்கிறார். ஆர்.கே.செல்வமணி பயங்கரவாதியாக வருகிறார். ரமேஷ்கண்னா, சுமன், சிங்கமுத்து, பவன், சுஜாவாருனி, அர்ச்சனா, கோமல் சர்மா என்று நிறைய நட்சத்திர பட்டாளம் உள்ளது.

கொலைகள், துப்பறிதல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைத்து இருக்கிறார் டைரக்டர் ஷாஜி கைலாஷ். படத்தின் முன்பகுதியில் வேக குறைவு. தமன் இசை பலம். சஞ்சீவ் சங்கர் கேமரா ரெயில் காட்சிகளை மெருகூட்டி இருக்கிறது.
திகில் எக்ஸ்பிரஸ்.


Next Story