நெருப்புடா


நெருப்புடா
x
தினத்தந்தி 11 Sep 2017 7:10 AM GMT (Updated: 11 Sep 2017 7:10 AM GMT)

கதையின் கரு: ஒரு ரவுடியின் மரணமும், அதன் பின் விளைவுகளும்... விக்ரம் பிரபு, வருண், ராஜ்குமார், தினேஷ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேரும் நெருக்கமான நண்பர்கள்.

நகரில் எங்கு தீ விபத்து நடந்தாலும், நண்பர்கள் ஐந்து பேரும் பாய்ந்து சென்று தீயை அணைக்கிறார்கள். வருண் தனது அக்காள் வீட்டுக்கு போய்விட்டு திரும்பும்போது, அவரை நகரின் மிகப்பெரிய தாதா மதுசூதனராவின் வலது கையான வின்சென்ட் அசோகன் வழிமறித்து தாக்குகிறார்.

அவரை பிடித்து வருண் தள்ளுகிறார். அதில், தலையில் அடிபட்டு வின்சென்ட் அசோகன் இறந்து விடுகிறார். தனது நண்பனை கொன்றவனை பழிவாங்க மதுசூதனராவ் ஆக்ரோஷமாக தேடுகிறார். அவரை சமாதானப்படுத்தி பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறார், விக்ரம் பிரபு. இதற்காக அவர் மதுசூதனராவை தேடிப்போகும்போது, அங்கே அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டு இருக்கிறார்.

மதுசூதனராவை கொன்றது யார், என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார், விக்ரம் பிரபுவின் பிரச்சினை அதோடு தீர்ந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு படத்தின் பின்பகுதி கதையில் விடை இருக்கிறது. விக்ரம் பிரபுவுக்கும், தீயணைப்பு படை அதிகாரி நாகினீடுவின் மகள் நிக்கி கல்ராணிக்கும் இடையேயான காதல், இலவச இணைப்பு.

விக்ரம் பிரபு, தீயணைப்பு வீரராக கம்பீரம். நிக்கி கல்ராணி யார்? என்று தெரியாமல் அவரை காதலிப்பதும், அவர் தீயணைப்பு வட்டார அதிகாரியின் மகள் என்று தெரிந்ததும் விலகிச் செல்வதும், விக்ரம் பிரபுவின் கதாபாத்திரத்துக்கு கண்ணியம் சேர்க்கிறது.

கொலை செய்யப்பட்ட அப்பா பொன்வண்ணனின் உடலைப் பார்த்து விக்ரம் பிரபு கதறும்போது, நெகிழ வைக்கிறார். சண்டை காட்சிகளில் அவருடைய வேகம், மிரள வைக்கிறது.

நிக்கி கல்ராணி, காதல் மற்றும் டூயட் காட்சிகளில், கலர் கலராக உடையணிந்து வருகிறார். முக ஒப்பனையில், நிக்கி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விக்ரம் பிரபுவின் அப்பாவாக பொன்வண்ணன், நிக்கியின் அப்பாவாக நாகினீடு ஆகிய இருவரும் கவுரவமாக வந்து போகிறார்கள். பொன்வண்ணன் சாக்கடை குழிக்குள் படுகொலை செய்யப்படும் இடத்தில், உருக்கம். வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அவர் கதாபாத்திரத்தை சுற்றியே கதை பின்னப்பட்டு இருக்கிறது.

‘நான் கடவுள்’ ராஜேந்திரனை சிரிப்பு வில்லனாக காட்டுகிறார்கள். சிரிப்பும் வரவில்லை. பயமும் வரவில்லை. சலிப்புதான் வருகிறது. சங்கீதாவின் மாறுபட்ட தோற்றமும், அவருடைய வருகையும், மிரட்டல்.

படத்தின் மற்றொரு கதாநாயகன், ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. ஒளிப்பதிவு யார்? என்று கேட்கிற அளவுக்கு பசுமை புரட்சி செய்து இருக்கிறது. சான் ரோல்டனின் பின்னணி இசையில், வாத்தியங்களின் சத்தம் அதிகம்.
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார், டைரக்டர் அசோக்குமார். வின்சென்ட் அசோகன்-வருண் தொடர்பான காட்சியில் திருப்பத்தை ஏற்படுத்தி, கதையோட்டத்தில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். இடையிடையே வரும் நகைச்சுவை காட்சிகள், பொறுமையை சோதிக்கின்றன. கடைசி 20 நிமிட காட்சிகள், எதிர்பாராத திருப்பம்.

Next Story