யார் இவன்


யார் இவன்
x
தினத்தந்தி 20 Sep 2017 6:49 PM GMT (Updated: 20 Sep 2017 6:49 PM GMT)

கதையின் கரு: ஒரு காதல் மனைவியை கணவனே கொலை செய்யும் கதை. கபடி விளையாட்டில் சாம்பியன், சச்சின்.

இவருக்கும், தொழில் அதிபர் பிரபுவின் மகள் இஷா குப்தாவுக்கும் இடையே காதல். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தேன்நிலவுக்காக கோவா செல்கிறார்கள். அங்கு ஒரு படகு வீட்டில் வைத்து இஷா குப்தாவை சச்சின் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறார். சச்சினை போலீஸ் கைது செய்கிறது. அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

இந்த கொலை வழக்கை கிஷோர் விசாரிக்கிறார். பணத்துக்காகத்தான் இஷா குப்தாவை சச்சின் காதலித்த விவரம் கிஷோருக்கு தெரியவருகிறது. ஒரு கபடி போட்டியின்போது சக வீரர் ஒருவரின் மரணத்துக்கும் சச்சின் காரணமாக இருந்திருக்கிறார் என்பதும் கிஷோருக்கு தெரிகிறது. இறந்து போன வீரர் சிறை வார்டனின் தம்பி என்பதால், ஜெயிலில் இருக்கும் சச்சினை அங்கேயே தீர்த்துக்கட்ட வார்டன் முயற்சிக்கிறார்.

அவரிடம் இருந்து சச்சின் தப்பினாரா, இஷா குப்தாவை சச்சின் கொலை செய்ய காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில், திருப்பங்களுடன் கூடிய பின் பகுதியில் இருக்கிறது.

சச்சின், கபடி வீரர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருக்கிறார். கபடி போட்டிகளின்போது, இவருடைய ஆட்டம் ரசிக்க வைக்கிறது. இஷா குப்தாவுக்கு டூயட் பாடுவதை தவிர, வேறு வேலைகள் இல்லை. அவருடைய தோழியாக வரும் தன்யா, வசீகர முகம். நடிக்கவும் தெரிந்து இருக்கிறது. இஷாவின் அப்பாவாக பிரபு வரும் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. சதீஷ் சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்.

கோவா சம்பந்தப்பட்ட காட்சிகளில் பினேந்திர மேனனின் ஒளிப்பதிவு, பளிச். எஸ்.எஸ்.தமன் இசையில், பாடல்கள் தேறவில்லை. பின்னணி இசை கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கிறது. டி.சத்யா டைரக்டு செய்திருக்கிறார். காதல் மனைவியை ஒருவன் ஏன் கொலை செய்கிறான்? என்ற ஒரு வரி கதையில், ஜீவன் இருக்கிறது. அதை தெளிவாக சொல்லியிருந்தால், படத்தில் விறுவிறுப்பு இருந்திருக்கும்.

கதாநாயகனை கெட்டவர் மாதிரியும், வில்லனை நல்லவர் மாதிரியும் காட்டி, கடைசி வரை ‘சஸ்பென்ஸ்’சை காப்பாற்றியிருப்பதற்காக, டைரக்டரை பாராட்டலாம்.

Next Story