காட்டு பய சார் இந்த காளி


காட்டு பய சார் இந்த காளி
x
தினத்தந்தி 7 Aug 2018 10:35 PM IST (Updated: 7 Aug 2018 10:35 PM IST)
t-max-icont-min-icon

வாகனங்களை தீ வைத்து கொளுத்தும் மர்ம ஆசாமி. படம் "காட்டு பய சார் இந்த காளி" கதாநாயகன் ஜெய்வந்த், கதாநாயகி ஐரா, டைரக்‌ஷன் யுரேகா, இயக்கியுள்ள படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு:  நகரில், வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நள்ளிரவில் ஒரு மர்ம ஆசாமி தீவைத்து கொளுத்துகிறான். இந்த தொடர் சம்பவங்கள், நகரில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. குற்றவாளியை பிடிக்க முடியாமல், போலீஸ் திணறுகிறது.

மர்ம ஆசாமியை பிடிக்க கமிஷனர் நரேன், காளி என்ற முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியை நியமிக்கிறார். கொளுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மணிசர்மா கம்பெனி என்ற குறிப்பிட்ட பைனான்ஸ் கம்பெனியை சேர்ந்தவை. அந்த பைனான்ஸ் கம்பெனியை நடத்தி வரும் மார்வாடி அண்ணன்-தம்பியிடம் இருந்து காளி தன் விசாரணையை தொடங்குகிறார். இதனால், காளி அந்த மார்வாடிகள் இருவரின் பகையை சம்பாதிக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நள்ளிரவில், கருப்பு உடையுடன் ஹெல்மெட் அணிந்தபடி, ‘பைக்’கில் பறந்து வரும் மர்ம ஆசாமியை காளி பின்தொடர்ந்து சென்று மடக்குகிறார். இருவருக்கும் இடையே கைகலப்பு நடக்கிறது. அதில், ‘பைக்’கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர் ஆண் அல்ல, பெண் என்று காளி கண்டுபிடிக்கிறார். வாகனங்களை தீவைத்து கொளுத்தியவர் அந்த பெண்தானா? அல்லது வேறு யாருமா? என்பதை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்கள்.

“அவன் சிங்கம் அல்ல...வானத்தில் பறந்து கொண்டிருக்கும் வல்லூறு மாதிரி...இரை இருந்தால்தான் இறங்கி வருவான்...” என்று காளியை பற்றி கமிஷனர் நரேன் கொடுக்கும் ‘கமெண்ட்,’ படத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ‘காளி’யாக வரும் ஜெய்வந்த், கம்பீரம்தான். தாடி-மீசையுடன் கூடிய அவருடைய இறுக்கமான முகமும், அளந்து பேசும் வசனமும், ‘காளி’ கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. சண்டை காட்சிகளில், ஜெய்வந்த் இறங்கி அடிக்கிறார். ‘கிளைமாக்ஸ்’சில் அவர் பேசும் வசனங்கள் கைதட்ட தோன்றுகின்றன.

ஐரா, அழகான முகம். கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரம். அவருடைய கதாபாத்திரம் அளவோடு பயன்படுத்தப்பட்டிருப்பது, டைரக்டர் யுரேகாவின் புத்திசாலித்தனம்.

போலீஸ் கமிஷனராக ‘ஆடுகளம்’ நரேன், கான்ஸ்டபிளாக மூணாறு ரமேஷ், மணிசர்மா பைனான்ஸ் கம்பெனியின் மானேஜராக மாரிமுத்து, மார்வாடி அண்ணன்-தம்பியாக சி.வி.குமார்-அபிஷேக், காம்ரேட் முதியவராக யோகி தேவராஜ், பெண்கள் காப்பகத்தின் வார்டன் எமி என படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் உயிரோட்டமானவை.

மணிபெருமாளின் கேமரா நிசப்தமான நள்ளிரவுகளை படம் பிடித்து இருக்கும் விதத்தில், திகிலூட்டுகிறது. விஜய் ஷங்கரின் பின்னணி இசை காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. சம்பவங்கள் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறுவதால், படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.

வேகமும், விறுவிறுப்பும் படத்தின் பெரிய பலம். வாகனங்களை தீவைத்து கொளுத்தும் குற்றவாளி யார்? என்பதை முன்கூட்டியே யூகிக்க முடிந்திருப்பது, திரைக்கதையின் பலவீனம்.
1 More update

Next Story