பேட்ட


பேட்ட
x
தினத்தந்தி 10 Jan 2019 6:45 PM GMT (Updated: 10 Jan 2019 6:45 PM GMT)

நண்பர் குடும்பத்தை உயிர் பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு மாவீரன். படம் ‘ பேட்ட’ கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகிகள் திரிஷா, சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ பேட்ட’ படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  ஒரு கல்லூரி விடுதியில் கதை ஆரம்பிக்கிறது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களை சீனியர் மாணவர் பாபிசிம்ஹா தனது நண்பர்களுடன் சேர்ந்து, ‘ராக்கிங்’ செய்கிறார். அவருடைய அப்பா நரேனின் செல்வாக்கை பயன்படுத்தி ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார். அந்த கல்லூரி விடுதிக்கு வார்டனாக வருகிறார், ரஜினிகாந்த். பாபிசிம்ஹாவின் ஆட்டத்தையும், அராஜகத்தையும் அடக்குகிறார். ரஜினிகாந்தை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்துக்காக பாபிசிம்ஹா காத்திருக்கிறார்.

அதே கல்லூரியில் படிக்கும் சனத் ரெட்டியை ஒரு கும்பல் கொல்ல முயற்சிக்கிறது. அந்த கும்பலின் கொலை வெறியில் இருந்து சனத் ரெட்டியை ரஜினிகாந்த் காப்பாற்றுகிறார்.

அவரை ரஜினிகாந்த் ஏன் காப்பாற்றினார்? என்பது, ‘பிளாஷ்பேக்’ கதை. அதில் ரஜினிகாந்தின் மனைவியாக திரிஷா வருகிறார். உயிர் நண்பர் சசிகுமார். இவரையும், இவருடைய காதல் மனைவி குடும்பத்தையும் வட மாநில ரவுடி கும்பல் குண்டு வைத்து கொல்கிறது. இந்த குண்டு வெடிப்பில் திரிஷா, அவர்களின் ஒரே மகன் ஆகியோரும் பலியாகிறார்கள்.

சசிகுமாரையும், அவருடைய குடும்பத்தையும் வட மாநில ரவுடிகள் ஏன் கொலை செய்தார்கள்? சனத் ரெட்டியை ரஜினிகாந்த் எதற்காக காப்பாற்றினார்? பாபிசிம்ஹா என்ன ஆனார்? என்ற கேள்விகளுக்கு மீதி கதை விடை சொல்கிறது.

நண்பர் குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்து போராடும் மாவீரராக ரஜினிகாந்த். படத்துக்கு படம் அவருடைய வயது குறைந்து கொண்டே போவது போல் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் தெரிகிற சூப்பர் ஸ்டார், இந்த படத்தில் இன்னும் இளமையான தோற்றம். அவருடைய ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளில் அத்தனை வேகம். படம் முழுக்க அவ்வப்போது, ‘பஞ்ச்’ வசனம் பேசி, ரசிகர்களை உற்சாகமாக வைத்து இருக்கிறார்.

“நான் நல்லவன். ஆனால் ரொம்ப நல்லவன் இல்லை..,” “புதுசா வருகிறவனை பழசா இருக்கிறவன் ஆட்டிப்படைக்க நினைக்கிறான் பாரு...அங்கேதான் ஆரம்பிக்கிறது, அரசியல்..,” “நல்லவனா இரு... ரொம்ப நல்லவனா இருக்காதே...” ஆகிய வசன வரிகளுக்கு தியேட்டரில் ஆரவாரம் செய்கிறார்கள்.

ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார், வில்லன்களாக விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபிசிம்ஹா...என நட்சத்திர பட்டாளம் நீளமானது. விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டப் போகிறார் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்.

திரிஷாவுக்கு சில காட்சிகளே என்றாலும், அவருடைய அழகும், சிரிப்பும் ரசிகர்களுக்கு போனஸ். மேகா ஆகாசுக்கு அம்மாவாக வருகிறார், சிம்ரன். இளமையான அம்மாவாக ‘சிம்ஸ்’ இன்ப அதிர்ச்சி அளிக்கிறார்.

சண்டை மற்றும் சாகச காட்சிகளில், எஸ்.திருநாவுக்கரசுவின் கேமரா மிரட்டியிருக்கிறது. அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாடல்களில் மென்மை கூட்டி கதையுடன் ஒன்ற வைக்கிறார். பின்னணி இசை, சில இடங்களில் வசியம் செய்கிறது. சில இடங்களில், வாத்தியங்களின் ஓசை, ஓவர். கதையும், அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதமும், ஜனரஞ்சகமான அம்சங்கள். ஒரு ரசிகரே படத்தை இயக்கியது போல் ரசனையோடு டைரக்டு செய்திருக்கிறார், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்த் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்திருப்பது, சிறப்பு.

Next Story