அக்னி தேவி


அக்னி தேவி
x
தினத்தந்தி 23 March 2019 2:45 AM GMT (Updated: 23 March 2019 2:45 AM GMT)

மோசமான அரசியல்வாதியை எதிர்த்து போராடும் துணிச்சலான போலீஸ் அதிகாரி. படம் "அக்னி தேவி" கதாநாயகன் பாபிசிம்ஹா, கதாநாயகி ரம்யா நம்பீசன், டைரக்‌ஷன் ஜேபிஆர்-ஷாம் சூர்யா. படத்தின் முன்னோட்டம் விமர்சனம்.

கதையின் கரு:  மாநில அமைச்சராக இருப்பவர், மதுபாலா. மோசமான அரசியல்வாதி. தன்னை எதிர்த்தவர்களை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ளும் பயங்கரவாதி. இவரை பற்றி கட்சியின் மேலிடத்தில் புகார் கொடுக்க முயற்சிக்கும் வடநாட்டு அரசியல்வாதியை கூலிப்படையை சேர்ந்த ஒரு சிறுவனை ஏவி, கொலை செய்கிறார்.

இந்த கொலை பற்றி தெரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த பத்திரிகை நிருபரின் தோழியையும் மதுபாலா கூலிப்படையை ஏவி, கொலை செய்கிறார். போலீஸ் கமிஷனர் போஸ் வெங்கட்டை கைக்குள் போட்டுக் கொண்டு உண்மையான கொலையாளியை தப்ப விடுகிறார், மதுபாலா. நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரி பாபிசிம்ஹா, மதுபாலாவுக்கு எதிராக செயல்படுகிறார். உண்மையான குற்றவாளியை அவர் பிடிக்க முயற்சிக்கிறார். அவரையும் போட்டுத்தள்ளுவதற்கு மதுபாலா கூலிப்படையை ஏவி விடுகிறார்.

கூலிப்படையின் கொலை வெறியில் இருந்து பாபிசிம்ஹா தப்பினாரா, இல்லையா? என்பது படத்தின் உச்சகட்ட காட்சி. அதோடு பாபிசிம்ஹாவுக்கும், மதுபாலாவுக்குமான ஒரு தொடர்பும் உச்சக்கட்ட காட்சியில் தெரியவருகிறது.

பாபிசிம்ஹா, துணிச்சலான போலீஸ் அதிகாரி பாத்திரத்துக்கு பொருந்துகிறார். சண்டை காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருக்கிறார். கதாநாயகி ரம்யா நம்பீசனுக்கு அதிக வேலை இல்லை. ஆரம்ப காட்சியிலும், கடைசி காட்சியிலும் பொம்மை மாதிரி வந்துபோகிறார். பாபிசிம்ஹாவின் கூடவே வரும் போலீஸ் நண்பர் சதீஷ் வழக்கம் போல் வசன காமெடி செய்கிறார். சிரிப்பு வரவில்லை.

படத்தின் சிறப்பு அம்சம், மதுபாலா. பயங்கர வில்லியாக அட்டகாசம் செய்கிறார். சக்கர நாற்காலியில் வரும் அவர் நடப்பதற்கே கஷ்டப்படுகிறார். கீழே விழப்போகும் அவரை கைகொடுத்து காப்பாற்ற முயற்சிப்பவரை, எட்டி உதைக்கிறார். அவருடைய சிரிப்பும், வசன உச்சரிப்பும் காட்சிகளுக்கு பதற்றம் கூட்டுகின்றன.

ஜனாவின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ்பிஜாயின் பின்னணி இசையும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கின்றன. எல்லா போலீஸ்-ரவுடி படங்களிலும் இருந்ததை திரும்ப பார்த்த உணர்வு, படத்தின் பலவீனம். பாபிசிம்ஹா யார், மதுபாலா யார்? என்ற சஸ்பென்சை உடைத்திருப்பது, யூகிக்க முடியாத ‘கிளைமாக்ஸ்.

Next Story