சத்ரு


சத்ரு
x
தினத்தந்தி 23 March 2019 2:57 AM GMT (Updated: 23 March 2019 2:57 AM GMT)

நண்பனை கொன்ற போலீஸ் அதிகாரியை பழிவாங்கும் வில்லன். படம் "சத்ரு" கதாநாயகன் கதிர், கதாநாயகி சிருஷ்டி டாங்கே,டைரக்‌ஷன் நவீன் நஞ்சுண்டன். படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  கதிர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். புதுசாக வேலையில் சேர்ந்த இளம் அதிகாரி என்பதால் துடிப்பாக இருக்கிறார். உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமலே குற்றவாளிகளை கைது செய்வதால், உதவி கமிஷனர் மாரிமுத்துவிடம் திட்டு வாங்குகிறார். இந்த நிலையில், நகரில் குழந்தைகளை கடத்தி, பணம் பறிக்கிறது ஒரு கும்பல். அதன் தலைவன், லகுபரன்.

லகுபரனும், அவருடைய நண்பர்களும் ஒரு குழந்தையை கடத்துகிறார்கள். குழந்தை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட கதிர் தனது நண்பர்கள் உதவியுடன் போய், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு ஆசாமியை சுட்டு கொன்றுவிட்டு, குழந்தையை மீட்கிறார். இது, உதவி கமிஷனர் மாரிமுத்துவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. கதிரை மூன்று மாதங்கள் ‘சஸ்பெண்டு’ செய்கிறார்.

நண்பனை இழந்த கடத்தல் கும்பல் ஆத்திரம் அடைகிறது. அதிரடியாக வீடு புகுந்து கதிரின் அப்பா பொன்வண்னனை கொலை செய்கிறது. மீதமுள்ள தனது குடும்பத்தினரை கதிர் எப்படி காப்பாற்றுகிறார், கடத்தல் கும்பலை அவர் பிடித்தாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில், மீதி படத்தில் இருக்கிறது.

கதிர் உயரமும், கம்பீரமும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்துக்கு பொருந்தியிருக்கிறது. படத்தில், காதலுக்கும் டூயட்டுக்கும் வேலை இல்லை. சண்டை காட்சிகளில், கதிர் வேகம் காட்டியிருக்கிறார். உணர்ச்சிகளை முகத்துக்கு கொண்டுவருவதற்கும், நடிப்புக்கும் அவர் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கதாநாயகி சிருஷ்டி டாங்கேவுக்கு அதிக வேலையில்லை. ஒன்றிரண்டு காட்சிகளில் வருவதோடு சரி. கதையின் எல்லையை மீறாமல் அளவோடு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்.

‘ராட்டினம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த லகுபரன்தான் வில்லன். கடத்தல் கும்பலின் தலைவராக வருகிறார். கண்களிலேயே கொலை வெறியையும், ஆக்ரோஷத்தையும் காட்டி, மிரட்டியிருக்கிறார். கதிரின் அப்பா வேடத்தில் பொன்வண்ணன், அண்ணி வேடத்தில் நீலிமா ராணி, அண்ணனாக பவன், கதிரின் நண்பராக அர்ஜுன்ராம், போலீஸ் உதவி கமிஷனராக மாரிமுத்து ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வு.

படத்தின் சிறப்பு அம்சங்கள் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், சூரியபிரசாத்தின் இசையும். போக்குவரத்து இல்லாத நகரின் நள்ளிரவுகளையும், அதிகாலை பொழுதையும் கேமராவில் பதிவு செய்திருக்கும் நேர்த்திக்கு பாராட்டுகள். பின்னணி இசை, காட்சிகளுக்கு திகில் சேர்க்கிறது.

அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புகளுடன், விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் நவீன் நஞ்சுண்டன். படத்தின் தலைப்பும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையும், டைரக்டர் யார்? என்று கேட்க தூண்டுகின்றன. பொன்வண்ணன் கொலை செய்யப்படுவதை இன்னும் திகிலாக காட்டியிருந்தால், அந்த காட்சிக்கு கனம் கூடியிருக்கும்.

Next Story