ஏழை விவசாயியாக-ஒரு குழந்தைக்கு அப்பாவாக-ஒட்டகம் இன்னொரு குழந்தையாக - பக்ரீத் விமர்சனம்


ஏழை விவசாயியாக-ஒரு குழந்தைக்கு அப்பாவாக-ஒட்டகம் இன்னொரு குழந்தையாக -  பக்ரீத் விமர்சனம்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:17 PM GMT (Updated: 26 Aug 2019 11:17 PM GMT)

விக்ராந்த், ஒரு ஏழை விவசாயி. மழை பொய்த்ததால், விக்ராந்தின் குடும்பம் வானம் பார்த்த பூமி போல் வறண்டு போகிறது. விவசாய கடன் வேண்டி அலைகிறார்.

போன இடத்தில், ஒரு முஸ்லிம் பெரியவரிடம் இருந்து ஒட்டகத்தை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். தன் குழந்தையுடன் இன்னொரு குழந்தையாக கருதி, அதை வளர்க்கிறார். இருப்பினும் அந்த ஒட்டகம் எதையும் சாப்பிட மறுக்கிறது.

விலங்கு நல மருத்துவர் எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க வைக்கிறார். அவர் ஒட்டகத்தை ஆராய்ந்து விட்டு, “இதை உடனே கொண்டு போய் ராஜஸ்தானில் ஒட்டகங்களுடன் சேர்த்து விடு. அது உனக்கும் நல்லது. ஒட்டகத்துக்கும் நல்லது” என்று அறிவுரை சொல்கிறார். அவருடைய அறிவுரையை ஏற்று விக்ராந்த் ஒட்டகத்துடன் ராஜஸ்தான் செல்கிறார்.

வழியில், விலங்கு வதை தடுப்பு படையினரிடம் சிக்கி, ஒட்டகத்தை கைப்பற்ற போராடுகிறார். அதில் இருந்து மீண்டு விக்ராந்த் ஒட்டகத்துடன் தனது பயணத்தை தொடரும்போது, அவரிடம் இருந்து ஒட்டகத்தை திருட முயற்சி நடக்கிறது. திருடர்களிடம் இருந்து ஒட்டகத்தை காப்பாற்றி, கால்நடையாகவே ராஜஸ்தான் சென்று, ஒட்டக கூட்டத்துடன் அந்த ஒட்டகத்தை சேர்க்கும்போது- அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.

விக்ராந்துக்கு பெயர் வாங்கி கொடுக்கிற மாதிரி கதையும், கதாபாத்திரமும்...ஒட்டகத்தின் மீது அவர் பாசமழை பொழியும் காட்சிகளில், செல்லப்பிராணி பிரியர்களின் கண்கள் குளமாகி விடும். ஏழை விவசாயியாக-ஒரு குழந்தைக்கு அப்பாவாக-ஒட்டகம் மிருகமே ஆனாலும், அதை இன்னொரு குழந்தையாக கருதி, “சாரா...சாரா...” என்று உச்சி முகர்ந்து விக்ராந்த் உருகும்போதெல்லாம், கண்களை நனைய வைக்கிறார்.

அவருடைய மனைவியாக வசுந்தரா. கிராமத்து பெண்மணியாகவே மாறியிருக்கிறார். இவர்களின் மகளாக ஷ்ருத்திகா. பணத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டகத்தை ஏற்றி செல்லும் வட மாநில லாரி டிரைவர் ரோகித் பதக், விக்ராந்தின் அப்பாவித்தனம் அறிந்து, அவருக்காக போலீசாரிடம் பரிந்து பேசும்போது, மொழி பேதம் கடந்து மனிதம் வெளிப்படுகிறது. கதையுடனும், காட்சிகளுடனும் ஒன்றி, இசையமைத்து இருக்கிறார், டி.இமான். பாடல்களும், பின்னணி இசையும் அடிமனது வரை ஊடுருவுகின்றன.

ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் படத்தை இயக்கியும் இருக்கிறார், ஜெகதீசன் சுபு. பசுமை புரட்சி செய்த வயல்வெளிகளும், பரந்து விரிந்து கிடக்கும் ராஜஸ்தான் பாலைவனமும் கண்களை விரிய வைக்கின்றன. சுயநல மனிதர்களின் களவாடும் புத்தி, அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை இதெல்லாம் ஏற்கனவே பார்த்தவைதான்.

இந்த குறைகளை தவிர்த்து பார்த்தால், ஒரு எளிய மனிதனின் மனிதநேய கதையை வர்த்தகம் பற்றி கவலைப்படாமல், நேர்மையாக படமாக்கியதற்காக டைரக்டர் ஜெகதீசன் சுபு, தயாரிப்பாளர் முருகராஜ் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள்.

Next Story