நூறு சதவீதம் கதையுடன் பொருந்துகிற ‘டைட்டில்.’ சங்கத்தலைவன் - விமர்சனம்


நூறு சதவீதம் கதையுடன் பொருந்துகிற ‘டைட்டில்.’ சங்கத்தலைவன் - விமர்சனம்
x
தினத்தந்தி 26 Feb 2021 6:30 PM GMT (Updated: 26 Feb 2021 6:30 PM GMT)

மாரிமுத்துவுடன் சமுத்திரக்கனி பேச்சுவார்த்தை நடத்தி, கையை இழந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடாக மூன்று லட்சம் ரூபாய் கிடைக்க செய்கிறார்.

கதை சம்பவங்கள் முழுவதும் சேலத்தில் நடக்கிறது. அங்குள்ள ஒரு விசைத்தறி ஆலையை மாரிமுத்து நடத்துகிறார். அதில் கருணாஸ் வேலை செய்கிறார். உடன் பணிபுரிகிற ஒரு பெண் கவனக்குறைவினால் விசைத்தறிக்குள் கை சிக்கி, ஒரு கையை இழக்கிறார்.

அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்து, பெண்ணின் தந்தைக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு கொடுத்து, பிரச்சினையை வெளியே தெரியாமல் மறைக்க முயற்சிக்கிறார், ஆலை அதிபர் மாரிமுத்து. அவருக்கு தெரியாமல் கருணாஸ், தொழிற்சங்க தலைவர் சமுத்திரக்கனிக்கு தகவல் கொடுக்கிறார்.

மாரிமுத்துவுடன் சமுத்திரக்கனி பேச்சுவார்த்தை நடத்தி, கையை இழந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடாக மூன்று லட்சம் ரூபாய் கிடைக்க செய்கிறார்.

இதற்கு காரணமானவர் கருணாஸ்தான் என்பதை மாரிமுத்து கண்டுபிடிக்கிறார். கருணாஸ் தலைமறைவாகிறார். அவருக்கு சமுத்திரக்கனி ஆதரவு கொடுக்கிறார். தலைமறைவாகும் கருணாஸ், தொழிற்சங்க தலைவர் ஆகிறார்.

அவரை போட்டுத்தள்ள மாரிமுத்து முயற்சிக்கிறார். அவருடைய சதித்திட்டத்தில் இருந்து கருணாஸ் தப்பினாரா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

தொழிற்சங்க தலைவராக வரும் சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல்.

கருணாசுக்கு இந்த படமும், அவருடைய கதாபாத்திரமும் ஒரு மைல் கல். கையை இழந்த பெண்ணின் விவகாரத்தில் தன் பெயர் வெளியில் வந்துவிடக்கூடாது என்று முதலாளிக்கு பயப்படும் அவர், மெதுமெதுவாக சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டும் காட்சிகளில், சிறந்த நடிகர் என்பதை அடையாளம் காட்டுகிறார்.

கருணாசை காதலிக்கும் சுனுலட்சுமியும், சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் ரம்யா சுப்பிரமணியனும் மிக அழகான தேர்வு. இனி, முழுநேர வில்லன் வேடங்கள், மாரிமுத்துவை தேடிவரும். ஜூனியர் பாலையா, ஈ.ராமதாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

மணிமாறன் இயக்கியிருக்கிறார். கதையோட்டத்தையும், அடுத்து என்ன நடக்கும்? என்பதையும் யூகிக்க முடிவது, குறைகள். வசனமும், சில காட்சிகளும் நெற்றியடி. ‘‘நீ இப்படியே திட்டிக்கொண்டிருந்தால், அவன் கூட ஓடிப்போயிடுவேன்’’ என்று சுனுலட்சுமி அவருடைய அம்மாவிடம் பேசுகிற வசனம், ஒரு உதாரணம். படத்தின் முடிவு, நெஞ்சை கனக்க வைக்கிறது.

Next Story