டைம் லூப்பில் சிக்கும் நாயகன் - ‘ஜாங்கோ’ சினிமா விமர்சனம்


டைம் லூப்பில் சிக்கும் நாயகன் - ‘ஜாங்கோ’ சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 21 Nov 2021 10:01 AM GMT (Updated: 21 Nov 2021 10:58 AM GMT)

டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் ஒருவர் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான் ஜாங்கோ திரைப்படத்தின் கதை.

புதுமுகம் சதீஸ்குமார், ஒரு டாக்டர். கதாநாயகி, தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்கிறார். இவருடைய வேலை சதீஸ்குமாரின் அம்மாவுக்கு பிடிக்காததால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில், ஒருநாள் இரவில் சதீஸ்குமார் தனது ‘பைக்’கில் வெளியே செல்லும்போது, பூமியை நோக்கி படுவேகத்தில் இறங்கி வரும் விண்கல்லின் கதீர்வீச்சு, அவர் மீது விழுகிறது.

இதனால் ‘நேர சுழற்சி’யின் பலாபலன்கள் அவருக்கு ஏற்படுகின்றன. ஒரே நாள் திரும்ப திரும்ப வருகிறது. அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை நடைபெறும் நிகழ்வுகள் திரும்ப திரும்ப வருகின்றன. இதை பயன்படுத்தி தன் மனைவிக்கு வர இருந்த ஆபத்தில் இருந்து அவரை சதீஸ்குமார் எப்படி காப்பாற்றுகிறார்? என்பது கதை.

கதாநாயகன் சதீஸ்குமார், களையான முகம். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார். காதலி மிர்னாளினியிடம் காதலை சொல்லும்போதும், நேர சுழற்சியில் சிக்கியிருப்பதை உணர்ந்து கோபப்படும்போதும், மனைவிக்காக ஏங்கும்போதும், மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகி மிர்னாளினியிடம் அழகும் இருக்கிறது, நடிப்பு திறனும் இருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இடைவேளை வரை கதை மெதுவாக நகர்கிறது. காட்சிகள் திரும்ப திரும்ப வருவது, இருக்கையில் நெளிய வைக்கிறது.

இடைவேளைக்குப்பின், திரைக்கதை வேகம் பிடிக்கிறது. வித்தியாசமான கதையை சொல்ல வேண்டும் என்ற முயற்சியில், டைரக்டர் மனோ கார்த்திகேயன் வெற்றி பெற்று இருக்கிறார்.


Next Story