இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
தினத்தந்தி 14 Jun 2025 8:42 AM IST (Updated: 15 Jun 2025 9:10 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 14 Jun 2025 8:51 PM IST

    திருமணம் குறித்து பரவிய வதந்தி - அனிருத் விளக்கம்

  • 14 Jun 2025 8:41 PM IST

    கேரள கடற்கரை அருகே தீப்பிடித்த கப்பல்; கண்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி கடந்த 9-ந்தேதி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

    இந்த நிலையில், தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள கடற்கரையில் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் தெற்கு பகுதியிலும், ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டத்தின் கடற்கரையிலும் கரை ஒதுங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • 14 Jun 2025 8:40 PM IST

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஈரான் மீது இஸ்ரேல் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இஸ்ரேலின் இந்த வன்முறைப்பாதை நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதற்கு கட்டுப்பாடு, நீதி மற்றும் அர்த்தமுள்ள ராஜதந்திரம் மூலம் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இனி போர் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

  • 14 Jun 2025 7:33 PM IST

    டி.என்.பி.எல் 10-வது லீக் போட்டில் லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி. 

  • 14 Jun 2025 7:12 PM IST

    சென்னை மீனம்பாக்கத்தில் சதமடித்த வெயில்

    வெப்பம் தமிழ்நாட்டில் இன்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் அடித்துள்ளது.

    மேலும் நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் கடும் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.

  • வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி
    14 Jun 2025 6:46 PM IST

    வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி

    வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    பேரணியின்போது வி.சி.க. தலைவர் திருமாவளவன் திறந்த வாகனத்தின் மீது பயணித்தார். அப்போது அவர் தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். வி.சி.க துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். 

  • 14 Jun 2025 6:38 PM IST

    பாமக நிர்வாகி மர்ம மரணம் - இளைஞரை சுட்டு பிடித்த போலீஸ்

    ராணிப்பேட்டை அருகே பாமக நிர்வாகி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீசார். சக்கரவர்த்தி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக சக்கரவர்த்தியை திட்டமிட்டு நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி - வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா
    14 Jun 2025 5:24 PM IST

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி - வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா

    ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன.

    தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்தது. இன்று 4-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 83 ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா அணி வரலாறு படைத்துள்ளது. 

  • 14 Jun 2025 5:03 PM IST

    'காந்தாரா 2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு நடிகர் மரணம்

    ஏற்கனவே, காந்தாரா 2 பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர் கடந்த மாதம் கேரளாவில். சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ராகேஷ் புஜாரி திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் போது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது 3-வது ஆளாக விஜூ வி.கே உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

  • 14 Jun 2025 3:57 PM IST

    ‘தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்’ - இஸ்ரேல் எச்சரிக்கை 

    இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், “ஈரான் மக்களை பணயக் கைதிகளாக மாற்றி, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார். இஸ்ரேல் மீதான தாக்குதலை அலி காமெனி நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story