ஐந்து கதைகளின் திரைவடிவம் - ‘ஐந்து உணர்வுகள்’ சினிமா விமர்சனம்


ஐந்து கதைகளின் திரைவடிவம் - ‘ஐந்து உணர்வுகள்’ சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 9 Dec 2021 4:12 PM GMT (Updated: 9 Dec 2021 4:12 PM GMT)

ஆர்.சூடாமணி எழுதிய 5 கதைகளின் திரைவடிவம், இது. ஆண்-பெண் உறவை மனோதத்துவ ரீதியில் சித்தரிப்பதுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம், ‘ஆந்தாலஜி’ திரைப்படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

1. இரண்டின் இடையில்:- பொதுவாகவே பெண்களின் மீது விடலைப் பருவத்தில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பையும், அது உண்டாக்கும் பாதிப்புகளையும் பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும் என்பதே ‘இரண்டின் இடையில்’ கதை. இதில் வரும் சம்பா டீச்சர் கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அவரை ஒருதலையாக காதலிக்கும் இளைஞர், நிறைய பேரின் இளமைக் காலத்தை நினைவூட்டுகிறார்.

2. அம்மா பிடிவாதக்காரி:- புதிதாக திருமணமான மகன், அவனுடைய மனைவி, நடுத்தர வயது தாய் ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் இடையே நிகழும் கதை, இது. ஒரு விதவை பெண்ணின் உணர்ச்சிகளை வெகு இயல்பாக தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருந்தார், ஸ்ரீரஞ்சனி.

3. பதில் பிறகு வரும்:- கேட்ட வரதட்சணையை தரமுடியாததால் தன் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்ட பெண்ணை 15 வருடங்களுக்கு பிறகு பார்க்கிறான், ஒருவன். அவள் ஒரு வங்கி அதிகாரியாக வசதியாக இருப்பதை பார்த்து சபலப்படுகிறான். தன் மனைவி இறந்துவிட்டதாகவும், வங்கி அதிகாரியான அந்த பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறுகிறான்.அதற்கு அவள் சொல்லும் பதில், அவனை நிலைகுலைய செய்கிறது. துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் சுஜிதாவின் நடிப்பு, பரபரப்பை ஏற்படுத்துகிறது.

4. தனிமை தளிர்:- குழந்தை தங்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று கருதுகிற ஒரு தம்பதியையும், தாய், தந்தை பாசத்துக்கு ஏங்கும் ஒரு மகளையும் இந்த கதை சித்தரிக்கிறது. இதில், பேத்தியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்துகிற பாட்டியாக சத்யப்ரியா வாழ்ந்திருக்கிறார்.

5. களங்கம் இல்லை:- பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஒரு பெண், அவளை பலாத்காரம் செய்த கொடூரன், பரந்த மனம் கொண்ட இளைஞன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை சுற்றி பின்னப்பட்ட கதை. மூன்று கதாபாத்திரங்களிலும் பொருந்தியிருந்தார்கள், நடிகர்கள்.

மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன் ஆகிய படங்களை இயக்கி மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்ற ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கியிருக்கிறார். கருத்தாழமுள்ள 5 சிறுகதைகளையும், கதாபாத்திரங்களையும் பார்த்த திருப்தியை தருகிறது, படம். கதையோட்டத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறது, ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை.


Next Story