சிவனடியார் பூச்சாண்டியாக மாறிப்போன கதை: ‘பூ சாண்டி வரான்' சினிமா விமர்சனம்


சிவனடியார் பூச்சாண்டியாக மாறிப்போன கதை: ‘பூ சாண்டி வரான் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 3 April 2022 2:56 PM GMT (Updated: 2022-04-03T20:26:51+05:30)

சிவனடியார் பூச்சாண்டியாக மாறிப்போன கதை என்பது இப்படத்தின் ஒருவரிக் கதை. சுவாரஸ்யத்துக்காக பேய், கொலை, பழங்கால நாணயம், கடாரம் போன்றவற்றையெல்லாம் திரைக்கதையில் சேர்த்து விறுவிறுப்பான அமானுஷ்ய க்ரைம் த்ரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

அமானுஷ்யங்கள் நிறைந்த திகில் படம். கதை, மலேசியாவில் நடக்கிறது. சங்கர், குரு, அன்பு ஆகிய மூன்று பேரும் நெருக்கமான நண்பர்கள். அவர்களில் அன்பு கால் ஊனமுற்றவர். சங்கர் எப்படியாவது பணக்காரராகிவிட வேண்டும் என்று பேராசைப்படுபவர்.

இவர்களின் கைகளுக்கு வித்தியாசமான தோற்றம் கொண்ட ஒரு நாணயம் வந்து சேர்கிறது. அதை மந்திரப்பலகையில் வைத்து தங்கள் ஆசை நிறைவேறுமா என்று சங்கரும், அன்புவும் குறி கேட்கிறார்கள். தனக்கு இரண்டு கால்களை கொண்ட பிராணியை படைத்தால், ஆசைகள் நிறைவேறும் என்று மந்திர பலகை சொல்கிறது.

அதற்கு சங்கரும், அன்புவும் சம்மதிக்கிறார்கள். அவர்களை எச்சரிக்கும் குரு, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவருடைய மரணம் பற்றிய விசாரணையின்போது, மல்லிகா என்ற பெண் பற்றி தகவல் கிடைக்கிறது. அவளை தேடி, முருகன் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளருடன் சங்கரும், அன்புவும் பயணிக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. முடிவு, எதிர்பாராதது.

இதற்கு முன்பு மலேசியாவில் இருந்து வந்த தமிழ் படங்கள் அனைத்தும் சுமாரான பட வரிசையிலேயே இடம் பிடித்தன. முதல் முறையாக விறுவிறுப்பான திரைக்கதையையும், திறமையான தொழில்நுட்பத்தையும் கொண்ட படமாக ‘பூ சாண்டி வரான்’ அமைந்து இருக்கிறது.

நடிகர்கள் ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேசினி என எல்லோருமே புதுமுகங்கள். பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இருவரும் கைகோர்த்துக் கொண்டு பணிபுரிந்து இருக்கிறார்கள். படத்துக்கு திகில் கூட்டியதில் இவர்களின் பங்கு நிறைய.

கதை சொன்ன விதத்தில் பயமுறுத்தி இருக்கிறார், டைரக்டர் ஜே.கே.விக்கி. மல்லிகாவின் விடுதி அறை தொடர்பான காட்சிகளும், உச்சக்கட்ட காட்சியும் சரியான மிரட்டல். சிவனடியார் என்று காட்டப்படுபவர், பெண்ணாக வந்து ஏன் திகிலூட்டுகிறார் என்பதற்கு விளக்கம் இல்லை.

சமீபகால பேய் படங்களில் ‘பூ சாண்டி’ செம மிரட்டல்.


Next Story