பகாசூரன்: சினிமா விமர்சனம்


பகாசூரன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: செல்வராகவன், நட்ராஜ்  டைரக்ஷன்: மோகன்.ஜி இசை: சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு : பரூக் ஜே பாஷா

ஓய்வுபெற்ற ராணுவ மேஜரான 'நட்டி' நட்ராஜ் யூடியூப்பில் குற்ற வழக்கு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

திருமணத்துக்கு வற்புறுத்தியது பிடிக்காமல் உயிரை மாய்த்ததாக போலீஸ் வழக்கை முடிக்கிறது. அந்த பெண்ணின் செல்போனை ஆராய்கிறார் நட்ராஜ்.

அப்போது காதலன் வற்புறுத்தலால் செல்போனில் நிர்வாண போஸ் கொடுப்பதும், அதுவே வினையாக மாறி அவளை பாலியல் தொழிலில் தள்ளி விடுவதும் தெரிய வருகிறது. பாலியல் தொழில் செய்யும் கும்பல் மிரட்டியதால் அவள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்கிறார்.

அந்த கும்பலை பிடித்து கூண்டில் ஏற்ற போலீசோடு களம் இறங்குகிறார். இன்னொரு புறம் தெருக்கூத்து கலைஞரான செல்வராகவன் சிவபக்தராக மாறி அடுத்தடுத்து குரூரமாக சில கொலைகளை செய்கிறார்.

அந்த கொலைகளின் பின்னணி காரணம் என்ன? பாலியல் கும்பலை நட்டி கண்டுபிடித்தாரா? என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படம்.

செல்வராகவனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை முழுமையாக பயன்படுத்தி தேர்ந்த நடிகராக தன்னை நிரூபித்து இருக்கிறார்.

மகள் மீது அதீத பாசம் காட்டும் தந்தையாக, பீமர் வேஷம் போட்டு மிடுக்காக வரும் கூத்து கலைஞராக கொலை வெறியராக பல முகம் காட்டி இருக்கிறார். நட்டி நட்ராஜ் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். கொலைகளை அவர் துப்பு துலக்கும் காட்சிகள் அம்சம். சண்டையிலும் வேகம் காட்டி உள்ளார்.

செல்வராகவனின் மகளாக வரும் தாரக்சி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். கே.ராஜன், ராதாரவி, கூல் சுரேஷ், தேனப்பன், குணாநிதி தேவதர்ஷினி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மன்சூர் அலிகான் ஒரு பாடல் காட்சியில் வந்து போகிறார்.

முதல் பாதியில் இருந்த சஸ்பென்ஸ், திருப்பங்கள் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

செல்போன்களால் நிகழும் சமூக சீரழிவை அழுத்தமான திரைக்கதையில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ள இயக்குனர் மோகன்.ஜியை பாராட்டலாம். திரைக்கதையை தொய்வு இல்லாமல் நேர்த்தியாக கொண்டு சென்றதில் அவரது திறமை பளிச்சிடுகிறது.

சாம்.சி.எஸ். பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. என்னப்பனல்லவா பாடலும், அதை படமாக்கிய விதமும் அபாரம். பரூக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு.


Next Story