நாயின் நெகிழவைக்கும் அன்பு - '777 சார்லி' சினிமா விமர்சனம்


நாயின் நெகிழவைக்கும் அன்பு - 777 சார்லி  சினிமா விமர்சனம்
x

ஒரு மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசத்தை கருவாக கொண்ட படம். தனது நாயின் நலனுக்காக, புகைப்பதை கைவிடும் கதாநாயகனையும், தனக்கு உள்ளன்போடு பாசம் காட்டிய எஜமானனின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் ஒரு நாயையும் உணர்வுப்பூர்வ பிணைப்புடன் சித்தரிக்கும் படம் சார்லி.

தர்மா, ஒரு விபத்தில் தாய், தந்தை மற்றும் தங்கையை பறிகொடுத்தவர். அந்த விபத்து ஏற்படுத்திய சோகம் அவரை சக மனிதர்களிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது. அவரிடம், 'லேபரடார்' இனத்தை சேர்ந்த ஒரு நாய் வந்து சேர்கிறது.

முதலில் அந்த நாயை வெறுக்கும் அவர், பின்னர் அதை நேசிக்க ஆரம்பிக்கிறார். அதன் மீது கவனம் செலுத்துகிறார். 'சார்லி' என்று பெயர் சூட்டுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சார்லியை சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்து செல்கிறார்.




சார்லியின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர், அதற்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாக கூறி, அது அதிக நாட்கள் உயிருடன் இருக்காது என்ற அதிர்ச்சியான தகவலை கூறுகிறார். தர்மா மனம் உடைந்து போகிறார். சார்லிக்கு பனிக்கட்டி மீது படுத்து உருளுவது மிகவும் பிடிக்கும் என்பதால் இமயமலை பகுதிக்கு அழைத்து சென்று அதை சந்தோசப்படுத்துகிறார்.

இந்த நிலையில் சார்லி திடீரென்று காணாமல் போகிறது. அது கிடைத்ததா, இல்லையா? என்பது 'கிளைமாக்ஸ்.'

தர்மா கதாபாத்திரத்தில், ரக்சித் செட்டி நூற்றுக்கு நூறு பொருந்துகிறார். ஆரம்பத்தில் சார்லியை ஒரேயடியாக வெறுக்கும் அவர், அதன் நன்றி உணர்வை பார்த்து மெள்ள மெள்ள அதன் மீது பாசமழை பொழியும் காட்சிகளும், நடிப்பும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

படத்தின் நடுப்பகுதியில் வரும் பாபிசிம்ஹா, குணச்சித்ர வேடத்தில், சரியான சவால். மனைவி ஓடிப்போனதை அவர் சொல்லும்போது, தியேட்டரில் அமைதிப் புயல். விலங்குகள் நலனில் அக்கறை செலுத்தும் ஊழியராக சங்கீதா சிருங்கேரி, கவனம் ஈர்க்கிறார்.




இமயத்தில் உள்ள பனிமலைகளை படமாக்கியிருக்கும் விதம், பாராட்டுக்குரியது. கிரண்ராஜ் கே. டைரக்டு செய்திருக்கிறார். ஒரு மனிதருக்கும், நாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை கருவாக வைத்து முழு நீள படம் செய்திருப்பது, இதுவே முதல்முறை. கதையும், காட்சிகளும் புதுசு.

படத்தின் நீளம் ரொம்ப சாஸ்தி. தேவையில்லாத சில காட்சிகளை துணிச்சலாக நீக்கியிருந்தால், படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.


Next Story