தாய்ப்பாசம், சகோதர பாசம் 'விருமன்': சினிமா விமர்சனம்


தாய்ப்பாசம், சகோதர பாசம் விருமன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: கார்த்தி நடிகை: அதிதி ஷங்கர்  டைரக்ஷன்: முத்தையா இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு : செல்வகுமார்

கார்த்தியும், டைரக்டர் ‘கொம்பன்’ முத்தையாவும் இணைந்த இன்னொரு படம். ‘குடும்ப சென்டிமென்ட்' மற்றும் கதாநாயகன்-வில்லன் மோதல் கதை. அதற்குள் தாய்ப்பாசத்தையும், சகோதர பாசத்தையும் கலந்து இருக்கிறார்கள்.

தாசில்தார் பிரகாஷ்ராஜுக்கு 4 மகன்கள். அவர்களில் கடைசி மகன், கார்த்தி. அம்மா (சரண்யா பொன்வண்ணன்)வின் மரணத்துக்கு காரணம் அப்பா (பிரகாஷ்ராஜ்) தான் என்பதால், அப்பா மீது கார்த்தி கொலை வெறியோடு இருக்கிறார். அதனால் கார்த்தி மீது பிரகாஷ்ராஜ் கோபமாக இருக்கிறார். இருவரும் எதிரும் புதிருமாக அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள்.

கார்த்தி, தாய்மாமன் ராஜ்கிரணிடம் வளர்கிறார். அவருடைய அண்ணன்கள் மூன்று பேரும் அப்பா பிரகாஷ்ராஜுடன் இருக்கிறார்கள். அந்த அண்ணன்கள், கார்த்திக்கு எதிராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், கார்த்திக்கும், அவருடைய அண்ணியின் தங்கைக்கும் இடையே காதல் வருகிறது. இவர்களின் காதலை பிரகாஷ்ராஜ் பிரிக்க முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா? கார்த்திக்கு எதிராக இருந்த அண்ணன்கள் அவருடன் இணைந்தார்களா? பிரகாஷ்ராஜ் திருந்தினாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில், மீதி கதையில் இருக்கிறது.

கிராமத்து முரடர் வேடம் கார்த்திக்கு கச்சிதமாக பொருந்தி விடுகிறது. இதற்கு முன்பு கொம்பனாக வந்தவர், இந்த படத்தில் விருமனாக மாறியிருக்கிறார். சண்டை காட்சிகளில் அவர் பொறி பறக்க அடிக்கிறார். ஒவ்வொரு அடியிலும் வில்லன் கும்பல் தெறித்து ஓடுகிறது.

கார்த்திக்கும், அதிதி ஷங்கருக்கும் இடையிலான காதல் காட்சிகள், பார்வையாளர்களை வசியம் செய்கிறது. கதாநாயகி அதிதிக்கு இது முதல் படம் என்றால் நம்பமுடியவில்லை. அனுபவப்பட்ட நடிகை போல் முதல் படத்திலேயே ஆட்டம், பாட்டு, நடிப்பு என்று 'ஆல்ரவுண்டராக' முத்திரை பதிக்கிறார்.

பாசமுள்ள தாய்மாமனாக ராஜ்கிரண். எதிரிகளை எலும்பு முறிய அடிக்கும் ஒரு சண்டை காட்சியும் அவருக்கு இருக்கிறது. பிரகாஷ்ராஜ் அப்பா வேடத்தில் வில்லத்தனம் செய்கிறார். படத்துக்கு படம் சூரியின் நகைச்சுவை தியேட்டரை அதிர செய்கிறது. இந்த படத்தில் அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும் சிரிக்க வைக்கின்றன.

ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, கருணாஸ், ஜி.எம்.சுந்தர், சிங்கம்புலி, வடிவுக்கரசி என தேர்ந்த நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். கதைக்கும், காட்சிகளுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தாற்போல் பின்னணி இசையமைத்து இருக்கிறார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

முத்தையா இயக்கியிருக்கிறார். கதையில் நிறைய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு உறவுகளையும் புரிந்து கொள்வதற்குள் அடுத்த காட்சி வந்துவிடுகிறது. கிராமத்து பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்துக்காக டைரக்டரை பாராட்டலாம். படத்தின் முதல் பாதியில் நீளம் அதிகம். இரண்டாம் பாதி, சூப்பர்.


Next Story