என் 4: சினிமா விமர்சனம்


என் 4: சினிமா விமர்சனம்
x
நடிகர்: மைக்கேல் தங்கதுரை நடிகை: கேப்ரில்லா  டைரக்ஷன்: லோகேஷ் குமார் இசை: பால சுப்பிரமணியம் ஒளிப்பதிவு : திவ்யன்க்

காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் வடிவுக்கரசி ஆதரவற்ற மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, அப்சல், வினுஷா ஆகியோரை சிறுவயதில் இருந்தே எடுத்து வளர்க்கிறார். மைக்கேலும் கேப்ரில்லாவும் காதலிக்கின்றனர். இதுபோல் அப்சல் அமீது வினுஷா தேவி ஆகியோருக்கும் காதல் மலர்கிறது.

ஒரு ராத்திரியில் வினுஷா துப்பாக்கியால் சுடப்பட்டு விழுகிறார். சுட்டவர் யார் என்று தெரியவில்லை. அனுஷாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

சுட்டவனை தீர்த்து கட்ட மைக்கேல் தங்கதுரை, அப்சல் தேடுகின்றனர். அவன் கண்டுபிடிக்கப்பட்டானா? துப்பாக்கியால் சுடப்பட்டது எதனால் போன்ற கேள்விகளுக்கு விடையாக மீதி கதை…

மைக்கேல் தங்கதுரை அப்படியே காசிமேடு இளைஞராக இருக்கிறார். காதல், குடும்ப பாசம், கோபம் என்று உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கேப்ரில்லா துறுதுறு வாயாடியாக வருகிறார். கஞ்சா பிடிக்கும் அப்சலை கோபமாக அறைவது. அதை தட்டிக்கேட்கும் மைக்கேலிடம் எகிறி சண்டைபோடுவது, காதலில் மென்மை காட்டுவது என்று நடிப்பில் அசத்தி உள்ளார்.

வாய்பேசாத பெண்ணாக வரும் வினுஷா கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். குடும்பத்தினர் சண்டை போட்டு பேசாமல் இருப்பதை பார்த்து கலங்குவது, கடலுக்கு போனவர்கள் திரும்ப தாமதமானதை பார்த்து தவிப்பது என்று ஜீவனுள்ள நடிப்பை கொடுத்துள்ளார்.

பாட்டியாக வரும் வடிவுக்கரசி அனுபவ நடிப்பை வழங்கி உள்ளார். இன்ஸ்பெக்டராக வரும் அனுபமா குமாரின் கிளைக்கதை மனதை கனக்க வைக்கிறது. அக்ஷய் கமல், பிரக்யா நாக்ரா, அபிஷேக் சங்கர், அழகு ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி வேகம். காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

காசிமேடு பகுதியை கண்முன் நிறுத்துகிறது திவ்யன்க் கேமரா. பால சுப்பிரமணியம் இசையும் பலம். கடற்கரை மக்களின் வாழ்வியலை பின்னணியாக வைத்து அழுத்தமான கதையை யதார்த்தம் மீறாமல் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் குமார்.


Next Story