பிரின்ஸ்: சினிமா விமர்சனம்


பிரின்ஸ்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: சிவகார்த்திகேயன் நடிகை: மரியா ரியா போசப்கா  டைரக்ஷன்: அனுதீப்கே.வி. இசை: தமன் ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா

காதலையும், நகைச்சுவையையும் கலந்து, அலட்டிக்கொள்ளாத திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பாரம்பரியம் கொண்டது. அப்பா சத்யராஜ். மகன் சிவகார்த்திகேயன். இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் சமூக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கில பாடம் எடுக்கும் டீச்சர், மரியா ரியா போசப்கா. சென்னையில் பிறந்த இங்கிலாந்து நாட்டு பெண்.

சிவகார்த்திகேயனுக்கும், மரியாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. மரியா இங்கிலாந்து பெண் என்ற ஒரே காரணத்துக்காக மகனின் காதலுக்கும், கல்யாணத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் சத்யராஜ். அப்பாவையும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றவர்களையும் எப்படி சமாதானப்படுத்தி சிவகார்த்திகேயன் காதலி மரியாவை கைப்பிடிக்கிறார் என்பது மீதி கதை.

காதலும், நகைச்சுவையும் கலந்த வேடம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். மரியாவை விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்தி செய்து இருக்கிறார்.

அவருடைய காதலியாக வரும் மரியா, சோனியா அகர்வாலின் சகோதரி போல் தெரிகிறார். இவர் தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசுகிற காட்சிகள், பொறுமையை சோதிக்கின்றன.

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சத்யராஜ், உடன் நடிக்கும் அத்தனை பேரையும் தனது திறமையான நடிப்பால் ஓரம் கட்டிவிடுகிறார். கதாபாத்திரமாகவே மாறிவிடும் சத்யராஜுக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு. பிரேம்ஜி அமரன், பஞ்சு சுப்பு ஆகிய இருவரும் வில்லன் முகம் காட்டியிருக்கிறார்கள்.

தமன் இசையில் பாடல்கள் எல்லாமே அதிரிபுதிரி. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா கோணங்கள் காட்சிகளுக்கு கனம் சேர்க்கின்றன. டைரக்டர் அனுதீப்கே.வி. விறுவிறுப்பாக கதை சொல்ல முயன்று இருக்கிறார். படம், கருத்து சொன்ன பழைய படங்களை நினைவூட்டுகிறது.


Next Story