ரத்தம் - சினிமா விமர்சனம்


ரத்தம் - சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஜய் ஆண்டனி நடிகை: மகிமா, நந்திதா  டைரக்ஷன்: சி.எஸ்.அமுதன் இசை: கண்ணன் நாராயணன் ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்

பத்திரிகை நிறுவனத்தில் வேலை செய்யும் விஜய் ஆண்டனி, குற்ற பின்னணி செய்திகளை துப்பு துலக்கி வெளியிடுவதில் திறமையானவர்.

ஆனால் சொந்த வாழ்க்கையில் நடந்த இழப்பினால் வேலையை உதறிவிட்டு மகளுடன் கொல்கத்தா சென்று வசிக்கிறார்.

இந்த நிலையில் பத்திரிகை அலுவலத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியை போலீஸ் பிடித்து சிறையில் அடைக்கிறது. இதையடுத்து பத்திரிகை உரிமையாளர் வேண்டுதலை ஏற்று அங்கு வேலைக்கு சேர்கிறார் விஜய் ஆண்டனி.

பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கொலை பாணியில் நிறைய மரணங்கள் நடந்து இருப்பது விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது. அதை துப்பு துலக்கி ஆதாரங்களை திரட்ட முயலும்போது பெரிய நெட்வொர்க் பின்னணியில் இருப்பதை கண்டு அதிர்கிறார். குற்றவாளிகள் யார்? அவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டினாரா? என்பது மீதி கதை.

விஜய் ஆண்டனிக்கு முகத்தில் சோகத்தை வைத்துக்கொண்டு துணிச்சலான வேலைகளை செய்ய வேண்டிய வேடம். அதை யதார்த்தமான நடிப்பின் மூலம் பிரமாதமாக செய்து இருக்கிறார்.

கை எலும்பு முறிந்த நிலையில் வெளிப்படுத்தும் ரியாக்ஷன், ஒரு கையால் சண்டை. புலனாய்வு என படம் முழுவதும் அதிரடி காண்பித்துள்ளார். மகிமாவுக்கு வித்தியாசமான வேடம். அதை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். நந்திதா அழகாக இருப்பதோடு தனது கதாபாத்திரத்தையும் ரசித்து செய்திருக்கிறார். ரம்யா நம்பீசனுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் அனுதாபத்தை அள்ளுகிறார். நிழல்கள் ரவியின் நிதானமான நடிப்பு பிரமாதம். கண்ணன் நாராயணன் இசையில் 'ஆருயிரே என் ஆருயிரே' பாடல் மனதை தொடுகிறது. பின்னணி இசையும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் பத்திரிகை துறையின் செயல்பாடுகளை அம்சமாக படம்பிடித்துள்ளார்.திரைக்கதையில் சுவாரசியங்களை சேர்த்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும் சாதி, மதம் என்ற பெயரில் சமுதாயத்தில் உளவியல் ரீதியான கொலைகள் எப்படி நடக்கிறது என்பதையும் அதிலிருந்து இளைய தலைமுறை எவ்வளவு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் விலகி இருக்க வேண்டும் என்பதையும் சமூக அக்கறையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். கதையை நேர்த்தியாக கொடுத்த விதத்திலும் அவரை பாராட்டலாம்.


Next Story