ரெஜினா: சினிமா விமர்சனம்


ரெஜினா: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஆனந்த் நாக், பவா செல்லதுரை நடிகை: சுனைனா  டைரக்ஷன்: டோமின் டிசில்வா இசை: சதீஷ் நாயர் ஒளிப்பதிவு : பவி கே.பவன்

தன் காதல் கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்க ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் சாமானிய பெண்ணின் கதையைப் பேசுகிறது `ரெஜினா'.

சுனைனா

குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்து தனிமரம் ஆகிறார் சுனைனா. தந்தையின் நண்பர் அரவணைப்பில் வளரும் சுனைனாவின் வாழ்க்கையில் பருவ வயதில் காதல் மலர்கிறது. வங்கி அதிகாரியாக இருக்கும் காதல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்குகிறார். அப்போது வங்கியில் நடக்கும் கொள்ளை முயற்சியில் சுனைனாவின் கணவர் கொலை செய்யப்படுகிறார்.

காவல்துறை வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சுனைனா காவல் அதிகாரிகளிடம் நியாயம் கேட்கிறார். அப்போது அவருக்கு அவமானமும் அவமரியாதையும்தான் மிஞ்சுகிறது. இந்த நிலையில் தன்னுடைய கணவனின் மரணமும் வங்கிக் கொள்ளையும் தற்செயலாக நடந்தது அல்ல என்பதையும் கணவரை கொலை செய்யவே திட்டமிட்டு வங்கி கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர் என்பதையும் அறிந்து அதிர்கிறார். இதனால் குற்றவாளிகளை தண்டிக்க புரட்சிப் பெண்ணாக மாறி களத்தில் இறங்குகிறார். கொலைக்கான பின்னணி என்ன? சதிகாரர்களை சுனைனா பழிதீர்த்தாரா? என்பது மீதி கதை.

சுனைனாவுக்கு முன் எப்போதும் இல்லாத கனமான வேடம். அதை அவரும் கெட்டியாக பிடித்துக்கொண்டு வித்தியாசமான நடிப்பில் அமர்க்களம் செய்திருக்கிறார். கணவனிடம் பூவாக, கயவர்களிடம் புயலாக என நடிப்பில் பல பரிமாணங்களை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. கவர்ச்சியிலும் குறை வைக்கவில்லை.

ரீது மந்த்ரா, நிவாஸ் ஆதித்தன், ஆனந்த் நாக், பாவா செல்லதுரை, விவேக் பிரசன்னா, பாக்ஸர் தீனா, கஜராஜ் என அனைவரும் கதாபாத்திரங்களை உள்வாங்கி தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சில இடங்களில் துண்டு துண்டாக காட்சிகள் திரைக்கதையை விட்டு விலகி நிற்பது பலகீனம். ஒளிப்பதிவாளர் பவி கே.பவன் காடு, மலை, மேடு என பயணித்து படத்துக்கு அழகு சேர்த்துள்ளார். காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப நிற வடிவம் கொடுத்திருப்பது அருமை.

சதீஷ் நாயர் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரம்மாண்டம் தெரிகிறது.

அநீதிக்கு எதிராக போராடும் புதுமைப்பெண் கதையை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தோடு புது வடிவத்தில் கொடுத்துள்ளார் இயக்குனர் டோமின் டிசில்வா.


Next Story