டாடா: சினிமா விமர்சனம்


டாடா: சினிமா விமர்சனம்
x
நடிகர்: கவின் நடிகை: அபர்ணா தாஸ்  டைரக்ஷன்: கணேஷ் கே.பாபு இசை: ஜென் மார்ட்டின் ஒளிப்பதிவு : எழில் அரசு

நாயகன் கவின், நாயகி அபர்ணா தாஸ் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதோடு காதலிக்கவும் செய்கிறார்கள். அப்போது பருவக்கோளாறால் வரம்பு மீற அபர்ணா தாஸ் கர்ப்பமாகிறார். அவமானத்தை சகிக்க முடியாத அவர்களின் பெற்றோர்கள் இருவரையும் வீட்டில் சேர்க்காமல் விலக்கி வைக்கிறார்கள்.

அன்றாட செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் கர்ப்பிணி மனைவியுடன் கஷ்டப்படுகிறார் கவின். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு வருகிறது. ஒரு கட்டத்தில் அபர்ணா தாஸ் பிரசவ வலியால் துடித்து கவினை செல்போனில் அழைக்க அவரோ போனை எடுக்காமல் உதாசீனம் செய்கிறார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார் அபர்ணா தாஸ். குழந்தை பிறந்த செய்தி அறிந்து மருத்துவமனைக்கு ஓடும் கவினுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

குழந்தையை அபர்ணாதாஸ் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு பெற்றோருடன் காணமால் போய் விடுகிறார். அவர் ஏன் காணாமல் போனார்? குழந்தையை வளர்க்க கவின் சந்திக்கும் போராட்டங்கள் என்ன? கவின் தன் மனைவியை கண்டுபிடித்தாரா? என்பது மீதி கதை. நாயகன் கவினுக்கு கல்லூரி மாணவர், கணவர், தந்தை என பல பரிமாணம் உள்ள கேரக்டர். மனைவியுடன் சண்டை, குழந்தை வளர்ப்பு என சராசரி கணவன் வேடத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

இவ்வளவு தேர்ந்த நடிப்பை அவரால் எப்படி கொடுக்க முடிந்தது என்ற வியப்பு ஏழாமல் இல்லை. நல்ல தந்தையாக மகன் பாசத்தில் நெகிழ வைக்கிறார்.

நாயகி அபர்ணா தாஸ் அழகான காதலியாக வசீகரிக்கிறார். சராசரி மனைவி எப்படியெல்லாம் நடந்து கொள்வாரோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து சபாஷ் வாங்குகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைக்கிறார். பாக்யராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். வி.டி.வி.கணேஷ், ஹரீஷ் கதையை கலகலப்பாக நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தன் கேமராவால் காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பின்னணி இசை கவனம் பெறுகிறது.

கவினுடன் பெற்றோர் சமரசம் ஆன பிறகு குழந்தையுடன் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அப்படியே விட்டு செல்வது நெருடல். சில காட்சிகளை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. காதல் ஜோடியின் நெருக்கம், குடும்பம், மோதல், பிரிவு என்று பல்வேறு கட்ட வாழ்க்கையை அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தி ஆச்சரியம் தருகிறார் இயக்குனர் கணேஷ் கே.பாபு.


Next Story