விட்னஸ்: சினிமா விமர்சனம்


விட்னஸ்: சினிமா விமர்சனம்
x
நடிகை: ஷர்த்தா ஸ்ரீநாத், ரோகிணி  டைரக்ஷன்: தீபக் இசை: ரமேஷ் தமிழ் மணி 

தூய்மை பணியாளர் ரோகிணியின் மகன் தமிழரசன் குடும்ப சூழல் காரணமாக கழிவுநீர் குழாய் அடைப்பை எடுக்கும் பணிக்கு தள்ளப்படுகிறார். அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்யும்போது இறந்து விடுகிறார். அதே குடியிருப்பில் கட்டிட நிபுணரான நாயகி ஷரத்தா ஸ்ரீநாத் வசிக்கிறார். இளைஞனின் மரணம் ஷரத்தாவை உலுக்க மகனை பறிகொடுத்து நிராயுதபாணியாக நிற்கும் ரோகிணிக்கு உதவ முன்வருகிறார். மகனின் சாவுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ரோகிணி போராடுகிறார். ரோகிணியால் ஆள் பலம், பண பலம் படைத்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஜெயிக்க முடிந்ததா? என்பது மீதிக்கதை.

நாயகி ஷர்த்தா ஸ்ரீநாத் மிக யதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். தன்னை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் கைதட்டல் பெறுகிறார். தாய் கதாபாத்திரத்தில் வரும் ரோகிணி மகனை இழந்து தவிப்பது, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டு போராடுவது என்று நடிப்பில் பல இடங்களில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி கேரக்டருக்கு அழகு சேர்த்துள்ளார். வக்கீலாக வரும் சண்முகராஜன் கோர்ட்டில் பேசும் வசனங்கள் ஈர்க்கின்றன. நீச்சல் பயிற்சியாளராக வரும் தமிழரசன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். அநீதியை எதிர்த்து போராடுபவராக வரும் ஜி. செல்வா, அவருடைய மனைவியாக வரும் சுபத்ரா ராபர்ட், அரசு அதிகாரியாக வரும் அழகம் பெருமாள், மாமாவாக வரும் வினோத் சாகர், குடியிருப்பு சங்க தலைவராக வரும் ஸ்ரீநாத் என அனைவரும் திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ரமேஷ் தமிழ் மணி பின்னணி இசை காட்சிகளோடு ஒன்றி இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிறகு வேகம் எடுக்கிறது. ஒரு சமூக அவலத்தை வணிகத்தனம் இல்லாமல் அழுத்தமான கதை, கதாபாத்திரங்களோடு மனதை தொடும்படி படமாக்கியுள்ள இயக்குனர் தீபக்கை பாராட்டலாம்.


Next Story