யசோதா: சினிமா விமர்சனம்


யசோதா: சினிமா விமர்சனம்
x
நடிகை: சமந்தா, வரலட்சுமி  டைரக்ஷன்: ஹரி, ஹரீஷ் இசை: மணிசர்மா ஒளிப்பதிவு : எம்.சுகுமாரின்

குடும்ப சூழ்நிலையால் வாடகைத்தாயாக மாறும் சமந்தா வாடகைத் தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து போராடும் கதை.

தங்கை ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார் சமந்தா. இன்னொரு புறம் வாடகைத்தாய் முறையை கார்பரேட் தொழிலாக நடத்துகிறார் வரலட்சுமி. அவரது வாடகைத்தாய் மையத்தில் கர்ப்பிணிகள் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த மையம் பலத்த பாதுகாப்புடன் இயங்குகிறது. அங்கு சமந்தாவும் வந்து தங்குகிறார். ஒரு கட்டத்தில் வாடகைத் தாய் மையத்தில் மோசடிகள் நடப்பது சமந்தாவுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. சமந்தா படம் முழுவதும் கர்ப்பிணியாகவே வருகிறார். அதற்கான உடல் மொழியையும் நடையையும் கடைசி வரைக்கும் கொண்டு செல்வது கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளது. அதிரடி காட்சியில் ஆவேசமாக சண்டை போட்டும் ஆச்சரியப்படுத்துகிறார். வரலட்சுமிக்கு இதுவரை செய்த படங்களில் மிக முக்கியமான படம். அதை தன் நடிப்பின் மூலம் தக்க வைத்துள்ளார். வித்தியாசமான ஸ்டைல். வில்லத்தனம் என்று சமந்தாவுக்கு சவால் விடுகிறார். இடைவேளைக்குப் பிறகு சமந்தா, வரலட்சுமி இருவரும் கதாபாத்திரங்களில் வேகம் காட்டி உள்ளனர். குழந்தை பெற்றெடுக்கும் இடம் மிரள வைக்கிறது.

இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் இருவரும் தேர்ந்தெடுத்துள்ள கதையும் அதை திரைக்கதையாக்கிய விதமும் முழு நீள ஆக்‌ஷன் படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. திரைக்கதையை இரு கோணத்தில் நகர்த்தி நேர்த்தியாக இணைத்துள்ளனர். முதல் பாதி கதையை சமந்தா சுமக்கிறார். இரண்டாம் பாதியை திரைக்கதை சுவராஸ்யப்படுத்துகிறது.

உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், சம்பத் உட்பட பலரும் தங்கள் பங்கை நிறைவாக செய்துள்ளனர். வாடகைத்தாய் பெண்கள் வறுமை நிலையை பகிர்வது, பிளாஷ் பேக் போன்றவை வேகத்தடை போடுகின்றன. சமூகத்தில் அதிர வைக்கும் ஒரு குற்றச் செயலை காட்சிப்படுத்தியதில் படம் கவனம் பெற்றுள்ளது. திகில் கதைக்கு ஏற்ற இசையை மணிசர்மா கொடுத்துள்ளார். எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.


Next Story