படம் முழுக்க இரண்டரை மணி நேரமும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் - நடிகை திரிஷா ஆசை


படம் முழுக்க இரண்டரை மணி நேரமும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் - நடிகை திரிஷா ஆசை
x
தினத்தந்தி 14 Nov 2020 7:18 AM IST (Updated: 14 Nov 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

படம் முழுக்க இரண்டரை மணி நேரமும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன் என நடிகை திரிஷா கூறி உள்ளார்.

தீபாவளி கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, திருமணம் வரை நடிகை திரிஷா மனம் திறந்து அளித்த பேட்டி இது. சுவையான கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த சுவாரசியமான பதில்களும் வருமாறு:-

இந்த தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்பது என் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். காதுகளை மூடிக்கொள்கிற மாதிரி அபாயகரமான வெடிகளை வெடிப்பதில், எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. அப்படி ஒருபோதும் பட்டாசுகளை வெடிப்ப தில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு பதில் கண்களுக்கு விருந்தளிக்கும் மத்தாப்புகளை கொளுத்துவேன். என் ரசிகர்களும் இப்படியே தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

முன்பெல்லாம் தீபாவளி அன்று வெளியில் எங்காவது சென்று வரு வேன். கொரோனாவின் தாக்கம் இன்னும் இருக்கிற சூழ்நிலையில், வெளியில் போக முடியவில்லை. அதனால் இந்த வருடம் வீட்டுக்குள்ளேயே தீபாவளியை கொண்டாடுவேன்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நான்கு கதாநாயகர்களுடனும் நட்பாக பழகிய விதத்தில், அவர்களின் சுபாவம் எப்படி?

நான்கு பேருமே கடினமான உழைப்பாளிகள். இரக்க சுபாவம் உள்ள மென்மையான மனசுக்காரர்கள். அவர்கள் நேரம் தவறாமையை கொள்கையாக வைத்திருப்பவர்கள். சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார்கள். சண்டை காட்சிகளில், பயமே இல்லாமல் துணிச்சலாக நடிப்பவர்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அல்லது உடல் நலத்துடன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அதனால்தான் ‘பேட்ட’ படத்தில் என் கதாபாத்திரம் ரொம்ப சிறியது என்று தெரிந்தும், அந்த படத்தில் நடித்தேன். இன்னொரு படத்தில், படம் முழுக்க இரண்டரை மணி நேரமும் அவருக்கு ஜோடியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன்.

இளமையையும், அழகையும் தக்கவைக்க என்ன செய்கிறீர்கள்?

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ரொம்ப ஒல்லியாக இருப்பதாக சிலர் குறை சொன்னார்கள். ஒல்லியான உடல்வாகு என் பரம் பரை வழியாக வந்தது. என் பாட்டி, அம்மா மற்றும் உறவினர்கள் எல்லோருமே ஒல்லியாகத்தான் இருப்பார்கள். முக வசீகரத்துக்கு பாதுகாப்பான உணவும், நல்ல தூக்கமும் இருந்தால் போதும்.

முறையான உடற்பயிற்சி செய்து வந்தால், இளமையான தோற்றம் அப்படியே நீடிக்கும். எனக்கு வீர விளையாட்டுகள் ரொம்ப பிடிக்கும். வெளிநாடு போகும்போதெல்லாம் ‘பங்கி ஜம்ப்’ செய்வேன். நடுவானத்தில், பாராசூட்டில் பறந்து இருக்கிறேன். இப்போது குதிரை ஏற்றம் பழகிக்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது அழகு நிலையத்திற்கு சென்று சரும அழகை பராமரிப்பேன்.

திருமணம் பற்றி என்ன முடிவு செய்து இருக்கிறீர்கள்?

என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்.

சமூக சேவையில் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது? 

நான் பள்ளியில் படிக்கும்போதே மற்றவர்களுக்கு உதவி செய்வேன். நாய்களை செல்லப்பிராணிகளாக அப்போதே ஏற்றுக்கொண்டேன். பல ஏழைக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உதவியிருக்கிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தேன். எங்கள் வீட்டில் 2 நாய்களை வளர்த்து வந்தேன். அதில் ஒரு நாய் சமீபத்தில் இறந்து விட்டது. இப்போது 5 தெரு நாய்களையும் வளர்க்கிறேன்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்?

எனக்கு சமையலில் ஆர்வம் இல்லை. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உண்டு. கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டையும், என் அறையையும் நானே சுத்தப்படுத்தினேன்.

Next Story