"நடிப்புக்கு கவர்ச்சி அவசியம் இல்லை"-நடிகை சாய் பல்லவி


நடிப்புக்கு கவர்ச்சி அவசியம் இல்லை-நடிகை சாய் பல்லவி
x

“என் முகம் எல்லாம் பருக்கள் இருக்கும் என்னை திரையில் ரசிகர்களால் பார்க்க முடியுமா? எனக்கு இந்த சினிமாத் துறை இடம் கொடுக்குமா? என்ற பயங்கள் என்னை பின் தொடர்ந்தன”

தென்னிந்திய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிகை சாய் பல்லவிதான் அடையாளம். அதற்காக இவர் கமர்ஷியல் படங்களையும் 'வேண்டாம்' என்று ஒதுக்கவில்லை. எந்த படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு சிறப்பு அடையாளம் இருக்கும்படி சினிமா பயணத்தை திட்டமிட்டு தொடர்கிறார். அவரது பேட்டி...

கேள்வி:- எந்த வேடம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை எப்படி வந்தது?

பதில்:- நான் நடிப்பையே கற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை அதுதான் எனது பிளஸ் பாயிண்ட் என்று நினைக்கிறேன். வீட்டில் எப்படி இருக்கிறேனோ, திரையில் கூட அப்படித்தான் காட்சியளிக்கிறேன். சாய்பல்லவி நன்றாக நடித்திருக்கிறார். வெளுத்து வாங்கி விட்டார். கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிவிட்டார். கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இப்படியெல்லாம் சொல்லும்போது எனக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கு கூட புரிவதில்லை. 'அது என்னடி... நீ எங்கே நடித்தாய்? வீட்டில் எப்படி இருக்கிறாயோ அப்படித்தானே இருக்கிறாய்' என்று சொல்லி என் அம்மா ஆச்சரியப்படுவார். நடனம் கூட பிரத்யேகமாக நான் கற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி:- நீங்கள் நடித்த அனைத்து படங்களும் உங்களுக்காகவே எழுதியது போல இருக்கிறது. இதற்கு உங்கள் கதை தேர்வுதான் காரணமா?

பதில்:- குறிப்பிட்ட கதாநாயகனுடன்தான் நடிக்க வேண்டும் என்ற எல்லைகள் எனக்கில்லை. கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். ஆனால் குறிப்பிட்ட ஸ்டார் கதாநாயகன் படத்தில் நீங்கள் கதாநாயகியாக நடிக்கிறீர்களா? என்று கேட்டால், அந்த ஸ்டார் யார்? என்று கூட கேட்க மாட்டேன். முதலில் கதையை சொல்லுங்கள் என்பேன். ஆனால் சினிமாத் துறையில் உள்ள அனைத்து கதாநாயகன்கள் மீதும் எனக்கு கவுரவம் இருக்கிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் அவரது நடனம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மகேஷ்பாபு திரையில் வரும்போது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண்கள் கூட இவ்வளவு அழகாக இருப்பார்களா? என்று அவரை பார்க்கும் போதெல்லாம் அதிசயித்துப் போகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்தமான கதாநாயகன் யார்?

பதில்:- எனக்கு எப்போதும் பிடித்தமான கதாநாயகன் சூர்யா. அவரோடு நடித்த எல்லா காட்சிகளுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.

கேள்வி:-சினிமாவில் நீங்கள் இதுபோன்ற ஒரு ஸ்டார் அந்தஸ்தை அடைவீர்கள் என நினைத்தீர்களா?

பதில்:- சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கும்போது, என் மனதிற்குள் கணக்கில் அடங்காத பயங்கள் இருந்தன. நான் அழகாக இருக்க மாட்டேன். என் முகம் எல்லாம் பருக்கள் இருக்கும். எனக்கு கதாநாயகியின் அம்சம் இல்லை. என்னை திரையில் ரசிகர்களால் பார்க்க முடியுமா? எனக்கு இந்த சினிமாத் துறை இடம் கொடுக்குமா? இப்படி விதவிதமான பயங்கள் என்னை பின் தொடர்ந்தன. நான் சினிமாவுக்கு வந்தபோது அதுவரை பார்த்த கதாநாயகிகள் எல்லோருமே அழகானவர்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நான் ஒன்றுமில்லை என்று தோன்றியது. அதற்காகத்தான் 'பிரேமம்' படப்பிடிப்பு அரங்குக்கு சென்ற முதல் நாளே, 'உண்மையை சொல்லுங்கள்?. நான் உங்கள் கதாபாத்திரத்திற்கு சரியானவள் தானா? இடையிலே படத்தி லிருந்து என்னை நீக்கிவிட மாட்டீர்களே?' என்று 100 கேள்விகள் கேட்டேன். இயக்குனர் புத்திரன் எனக்குள் நம்பிக்கை வளர்க்க படாத பாடுபட்டார். முதல் ஷாட் ஓ.கே. ஆன பிறகே எனக்குள் நம்பிக்கை அதிகரித்தது. 'பிரேமம்' ரிலீசான நாள் எனக்கு இன்னும் அப்படியே மனதில் பசுமையாக இருக்கிறது. தியேட்டரில் படம் முடிந்த உடனே எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எனக்கென்று சினிமாத்துறையில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்று அன்றே எனக்குத் தோன்றியது.

கேள்வி:- சினிமாவுக்கு வந்தது முதல் இப்போது வரை ஒரே எடையுடன் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்கிறீர்களே அது எப்படி?

பதில்:-நான் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சாதம் பருப்பு என்றால் உயிர். ரசம் சாதம் மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புக்கு சென்றால் மோர், இளநீர் இருந்தால் போதும். வேறு எதுவும் கேட்க மாட்டேன். 'மேக்கப்' என்றால் சுத்தமாக பிடிக்காது. ஜாலியாக பேட்மின்டன் விளையாடுவேன். நான் அவ்வளவு சீக்கிரம் குண்டாக மாட்டேன். எனவே எனக்கு ஜிம்மில் உடற்பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வரவில்லை. சமூக வலைத்தளங்களில் கூட அதிகமாக இருக்க மாட்டேன். எனக்கு அதெல்லாம் நேர விரயம் என்று தோன்றுகிறது. ஆனால் முக்கியமான விஷயங்கள் ஏதாவது இருந்தால் என் தங்கை எனக்கு சொல்லுவார்.

கேள்வி:- உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர்?

பதில்:- 'பிதா', 'லவ் ஸ்டோரி' இரண்டு படங்களுமே எனக்கு மிகவும் பிடித்த படங்கள். எனது சினிமா பயணத்தில் மறக்க முடியாத படங்களும் கூட. 'பிதா' படம் என் சினிமா பயணத்தையே மாற்றிவிட்டது. இந்த விஷயத்தில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவர் என் சினிமா பயணத்தை மட்டுமல்ல, என் எண்ணங்கள், நான் யோசிக்கும் விதத்தைக் கூட மாற்றிவிட்டார். படப்பிடிப்பில் 100 பேர் இருந்தால் அந்த 100 பேரையும் சமமாக பார்க்கும் இயக்குனர் அவர் மட்டும் தான் என நினைக்கிறேன். நாம் எல்லாம் இங்கே வேலை செய்வதற்காக மட்டும்தான் வந்திருக்கிறோம். யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. யாரும் தாழ்ந்தவர்களும் அல்ல. இங்கே ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. அனைவரும் சமம்தான் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அது மட்டுமல்ல கதாநாயகன்-கதாநாயகி இடையே கூட வித்தியாசம் பார்க்காமல் இருவரையுமே சமமாக பார்ப்பார். உன் உரிமைக்காக நீ போராடு; சாதித்துக் கொள். அது வீடாக இருக்கட்டும். படப்பிடிப்பு தளமாக இருக்கட்டும் என்று அடிக்கடி சொல்லுவார். தற்போது என் வாழ்க்கையில் கூட நான் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறேன்.


Next Story