திரையில் வலுவான பெண்ணாக நடிக்கவே விருப்பம் - நடிகை சமந்தா


திரையில் வலுவான பெண்ணாக நடிக்கவே விருப்பம் - நடிகை சமந்தா
x

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் சமந்தா. பேமிலிமேன் வெப் தொடருக்கு பிறகு இந்தி பட வாய்ப்புகளும் குவிகிறது.

சமீபத்தில் தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி மீண்டு இருக்கும் சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

நடிகையாக உங்களின் நீண்ட பயணத்தை பற்றி...

நடிகையாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. முதல் படத்தில் நடித்தபோது அந்த எண்ணம் கூட எனக்கு இல்லை. நான் நடிக்கும் கதாபாத்திரம் திருப்தியாDesire to act as a strong woman on screen - actress Samanthaக உள்ளதா? இல்லையா? என்று மட்டுமே பார்த்தேன். இப்போது என்னைப் பார்த்து நானே பெருமைப்படுகிறேன்.

எப்போதும் திரையில் கதாநாயகி ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் யாரோ ஒரு ஹீரோ வந்து காப்பாற்றுவதும் போன்ற வழக்கமான கதாபாத்திரங்களை செய்யாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். திரையில் பலவீனமாக இல்லாமல் தைரியமான, வலுவான பெண்ணாக நடிக்க விரும்புகிறேன்.

சாகுந்தலம் படத்தில் நடித்தது குறித்து?

எனது பார்வையில் இயக்குனர் குணசேகர் ஒரு பெமினிஸ்ட். அவர் பீமேல் ஓரியண்டட் கதைகள் நன்றாக எழுதுவார். ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டார். மிகச் சிறந்த கதைகளை, பெண்களை சுற்றி மிகவும் ஆர்வத்தை கிளப்பும்படியாக வடிவமைக்க கூடியவர் என்பது அந்தப் படத்தில் நடித்த பிறகு எனக்கு தெரிந்தது. பெண்களின் வாழ்க்கை விஷயங்களோடு படங்கள் எடுக்க வேண்டும் என்பது அவரது சங்கல்பம். இது போன்ற ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு முதலில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சவால் விடும் கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என்றால் எனக்கு மிகவும் ஆர்வம். அதனால்தான் இந்த படத்தில் நடித்தேன். இந்த படத்தில் நடித்த முழு நேரமும் நானும் ஒரு ரசிகையாக இந்த கதாபாத்திரத்தை அனுபவித்தேன். இது சிம்பிளாக சொல்லும் கதை அல்ல. இதில் காதல், மோதல் இணைந்து இருக்கிறது. அதற்கும் மேலே எமோஷன்ஸ் நிறைய இருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய கஷ்டமான கதை இது.சாகுந்தலம் கதாபாத்திரத்தில் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் நடித்தேன்.

இதுவரை நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு பிடித்தது...?

நான் நடித்த எல்லா படங்களிலும் அனைத்து கதாபாத்திரங்களும் பிடித்தவைதான். எல்லாவற்றையும் விட 'ஓ பேபி' படம் எப்போதும் என் மனதில் இடம் பிடித்த வித்தியாசமான படம். எனது சினிமா பயணத் தில் மிக மிக பிடித்த கதாபாத்திரம் பேபி. அதில் ஒவ்வொரு காட்சியையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செய்தேன். அது ரிலீசான பிறகு எப்படி ஓடுமோ என்று உள்ளுக்குள் பயமாகவே இருந்தது. ஆனால் நன்றாக நடித்தாய் என்று அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் வந்த பிறகு திருப்தி ஏற்பட்டது.

சினிமாவை தவிர்த்து உங்களுக்கு மிகவும் பிடித்தது...

நான் விரும்பி செய்யும் வேலைகளில் ஒன்று உடற்பயிற்சி. பல ஆண்டுகளாக உடற்பயிற்சி எனது தினசரி வாழ்க்கையில் ஒரு பாகம் ஆகிவிட்டது. தினமும் ஜிம்மில் தவறாமல் இருப்பேன்.. ட்ரெட்மில், சைக்கிளிங் போன்றவை அல்லாமல் அதிகமாக வெயிட் லிப்டிங் செய்வேன். எந்த ஒரு நாளாவது உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனால் எதையோ இழந்துவிட்டது போல தோன்றும்.

இசை கேட்பது பற்றி...

பயணங்களின் போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் பாடல்கள் கேட்பது பிடிக்கும். எல்லாவற்றையும் விட மயாமியில் நடைபெறும் அல்ட்ரா மியூசிக் பெஸ்டிவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கு மேசியோ பிளக்ஸ் என்னும் டி.ஜே பாடல்களை கேட்டுக் கொண்டே நடனம் ஆடுவது என்றால் அவ்வளவு சந்தோஷம், உற்சாகம்.

புத்தகம் படிப்பீர்களா?

எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளது. அவற்றுள் ரோண்டா பர்ன் எழுதிய 'த சீக்ரெட்' புத்தகம் மிகவும் பிடிக்கும். அதை படித்த பிறகுதான் எனக்குள் நேர்மறை எண்ணம் அதிகரித் தது. அது மட்டும் இன்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் எழுதிய 'வில்' என்னும் புத்தகமும் பிடிக்கும். அது என் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது.

தோல்விகளும், நஷ்டங்களும், பிரச்சினைகளும்.. இப்படி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளை எப்படி தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்று வில் விவரித்து இருக்கிறார். இது போன்றவற்றை படிக்கும்போது நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்பது புரிகிறது.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள் பற்றி...

ஒரு நடிகையாக பிட்டாக இருப்பதற்கு பீநட் பட்டர், ஓட்ஸ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறேன். சிற்றுண்டியில் இட்லி சாம்பார் இருந்தால் அன்று எனக்கு ஒரு பண்டிகை போல. அதே போல பில்டர் காபி, தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் போன்றவற்றை பார்த்தால் என்னை கட்டுப்படுத்த முடியாது. இனிப்பு வகைகளில் சாக்லேட், பால்கோவா மிகவும் பிடிக்கும். இவற்றையெல்லாம் அவ்வப்போது மட்டுமே எடுத்துக் கொள்வேன்.

உங்களுக்குப் பிடித்தமான உடைகளைப் பற்றி?

ஒரு நடிகையாக எல்லாவிதமான உடைகளையும் அணிந்து கொள்கிறேன். புடவைகளை மிகவும் விரும்புவேன். அதேபோல விதவிதமான டிசைன்களில் கணக்கில் அடங்காத வெள்ளைச் சட்டை மட்டும் வாங்கி குவித்து விடுவேன். நடிகையர் திலகம் படத்தில் நான் கட்டிக் கொண்ட 80கள் காலத்திய புடவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மலர்கள் அடங்கிய பிரிண்டில் வந்த அந்த புடவைகளை பார்க்கும்போது என் அம்மா நினைவுக்கு வருவார். திரையில் என்னை நான் பார்த்துக் கொண்டபோது நான் என் அம்மா மாதிரியே இருப்பதாக தோன்றியது.

இவ்வாறு சமந்தா கூறினார்.


Next Story