தியேட்டர் டிக்கெட் விலை விவகாரம்; தெலுங்கு நடிகர்கள் முதல்-மந்திரியுடன் முக்கிய ஆலோசனை!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்டோர் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர்.
விஜயவாடா,
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விலையை குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர ஐகோர்ட், மாநில அரசுக்கு தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து சினிமா திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து அந்த குழு, ஆந்திராவில் திரைப்பட டிக்கெட் விலையை அதிகரிப்பதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என ஒளிப்பதிவு துறை மந்திரி வேங்கடராமையா நேற்று தெரிவித்தார். மேலும், அவர் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியுடனான நேற்றைய சந்திப்பின் போது, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச டிக்கெட் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிலையில், இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்டோர் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர். அவர்களுடன் முன்னணி இயக்குனர்களான ராஜமவுலி, கொரட்டல சிவா உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.இந்த சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
அவர்கள் அனைவரும் விமானத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஜனவரி 12ந்தேதி அன்று முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story