சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - மனம் திறந்த அமீர்கான்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 26 March 2022 8:41 PM GMT (Updated: 2022-03-27T02:29:40+05:30)

தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்ததால் சினிமாவை விட்டு விலக நினைத்ததாக பாலிவுட் நடிகர் அமீர்கான கூறியுள்ளார்.

மும்பை,

தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்ததால் சினிமாவை விட்டு விலக நினைத்தாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

நடிக்க தொடங்கியபோது, என் குடும்பம் என்னுடன் மட்டுமே இருக்கிறது என்று நினைத்துக் கொண்ட நான், அவர்களை சாதாரணமாக கருதி, பார்வையாளர்களின் மனதைக் கவரும் பயணத்தை மேற்கொண்டேன். 

நான் சுயநலவாதி, என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் என் குழந்தைகளுடன் இருந்தேன், ஆனால் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை. இதை இப்போது 57 வது வயதில் உணர்ந்திருக்கிறேன். 86 வயதில் உணர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன், குறைந்தபட்சம் இப்போது என்னால் திருத்த முடியும். என் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

சினிமா என்னை என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டதாக உணர்ந்தேன். நான் இனி நடிக்க மாட்டேன், திரைப்படங்களை தயாரிப்பேன் என்று எனது குடும்பத்தினரிடம் கூறினேன். நான் உங்கள் அனைவருடனும் இருக்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

என்னுடைய குழந்தைகள் அப்படி வித்தியாசமான நபராக மாற வேண்டாம் என்று கூறினர். நான் தவறு செய்கிறேன் என்று என் குழந்தைகளும் என்னுடைய மனைவி கிரணும் எனக்கு விளக்கினர். எனக்குள் சினிமா இருப்பதாக கூறிய கிரண் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு என்னிடம் கூறினார்.

எனக்கு சிந்திக்க நேரம் கிடைத்தது, நான் நிறைய சுயபரிசோதனை செய்தேன். எனக்குள் ஒரு பெரிய மாற்றம் வந்தது. நான் 18 வயதிலிருந்தே என் மாமாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்க்கையை எப்படிக் கழித்தேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story