சவுதி அரேபியாவில் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ திரைப்படத்தை வெளியிட தடை
‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ திரைப்படத்தை சவுதி அரேபியாவில் வெளியிடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ரியாத்,
மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடன் மேன்: நோ வே ஹோம்’ திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவென்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படம் தயாராகி உள்ளது.
டோபி மெக்யூர் நடித்த ஸ்பைடர் மேன் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவரான சாம் ரயாமி, இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனால் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற மே 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில், ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவென்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படத்திற்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அமெரிக்கா சாவெஸ் என்ற புதிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த கதாப்பாத்திரம் தன்பாலின ஈர்ப்பாளராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சவுதி அரேபியாவின் திரைப்பட தணிக்கைக்குழு ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ திரைப்படத்தை சவுதி அரேபியாவில் வெளியிடுவதற்கான விநியோக சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக மார்வெல் நிறுவனத்தின் ‘எட்டர்னல்ஸ்’ திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் தன்பாலின ஈர்ப்பாளராக சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கும் சவுதி அரேபிய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story