கடல் கடந்து கலை வளர்க்கும் நாட்டியக் கலைஞர்!


கடல் கடந்து கலை வளர்க்கும் நாட்டியக் கலைஞர்!
x
தினத்தந்தி 13 Oct 2021 8:20 AM GMT (Updated: 13 Oct 2021 8:20 AM GMT)

எனது நடனப் பள்ளியின் மூலம் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் ‘நாட்டிய மயில்’ என்ற நடனப் போட்டியில், 2001-ம் ஆண்டு எனது மாணவர்கள் கலந்துகொண்டு, மூன்றாம் பரிசை வென்றார்கள். அடுத்த ஆண்டே அனைத்து உலக தமிழ்க்கலை நிர்வாகத்தால் நடத்தப்பட்டத் தேர்வுகளில் எனது மாணவர்கள் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பவர் நாட்டியக் கலைஞர் மங்களநாயகி வசந்தகுமாரன். இலங்கையில் இருந்து அகதியாகக் கடல் கடந்து சென்றவர், தனது கடின உழைப்பாலும், திறமையாலும் முன்னேறி, சுவிட்சர்லாந்தில் ஒரு நாட்டியப் பள்ளியை நிறுவி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களை உருவாக்கியுள்ள மங்களநாயகியுடன் ஒரு சந்திப்பு…  



உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

இலங்கையில், கரம்பொன் எனும் கிராமத்தில் சோமசுந்தரம்-மனோன்மணி தம்பதிக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தேன். குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தேன். ஆரம்பப்பள்ளி காலத்தில், கல்வியோடு, ஆடல்-பாடல்களிலும் சிறந்து விளங்கினேன். சிறு வயதில் இருந்தே முறையாக நடனம் பயின்றேன். பள்ளிப் பருவத்தில் அம்மாவையும் இழந்தேன். 

அக்கா அமிர்தநாயகி, அண்ணன் நவநேசன் ஆகியோர் ஆதரவுடன் வளர்ந்தேன். அந்த நேரத்தில் நடனம் எனக்கு பெரும் துணையாக இருந்தது.

இப்போது சுவிட்சர்லாந்து நாட்டில் கணவர் வசந்தகுமாரன், மகன் சதுர்சன் ஆகியோருடன் வசிக்கிறேன். நடனப் பள்ளியை நடத்தி வருகிறேன். கணவர் முதியோர் காப்பகம் ஒன்றில் பணி செய்கிறார்.

எத்தனை ஆண்டுகள் நாட்டியம் பயின்றீர்கள்?

பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் முறையாகப் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டேன். இலங்கையில் நான்கு ஆண்டுகளுக்கான நடனத் தேர்வுகளில் வெற்றி பெற்று, நான் படித்தப் பள்ளியிலேயே நடன ஆசிரியராகப் பணிபுரிந்தேன். 

‘நாட்டியக் கலைமணி’ எனும் பட்டயப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையில் போர்ச்சூழல் அதிகரித்தது. அதனால், அதைத் தொடர முடியாமல், 1992-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அகதியாக வந்து சேர்ந்தேன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம், நாட்டியக் கலையில் இளங்கலை பட்டப் படிப்பையும் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தேன். நட்டுவாங்கத்தில் பட்டயப் படிப்பை முடித்தேன்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடனப் பள்ளியைத் தொடங்கியது பற்றி?

சுவிட்சர்லாந்து வந்த பின்பு, இங்கு வசித்து வந்த எனது அத்தை மகன் வசந்தகுமாரனைத் திருமணம் செய்து கொண்டேன். அடுத்த ஆண்டே மகன் பிறந்தான். பின்னர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்
பதற்காக உணவுத் தொழிற்சாலையில் பணியாற்றினேன். 



சக ஊழியர்கள் நான் நடனம் பயின்றவள் என்று தெரிந்ததும், தங்களின் பிள்ளைகளுக்கு நடனம் கற்றுத் தரும்படி கேட்டார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நடனம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். இட நெருக்கடி காரணமாக அது தடைபட்டு, பிறகு மீண்டும் சில ஆண்டுகள் கழித்து நடனப் பள்ளியைத் தொடங்கினேன்.

நாட்டியத்தில் இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?

எனது நடனப் பள்ளியின் மூலம் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் ‘நாட்டிய மயில்’ என்ற நடனப் போட்டியில், 2001-ம் ஆண்டு எனது மாணவர்கள் கலந்துகொண்டு, மூன்றாம் பரிசை வென்றார்கள். அடுத்த ஆண்டே அனைத்து உலக தமிழ்க்கலை நிர்வாகத்தால் நடத்தப்பட்டத் தேர்வுகளில் எனது மாணவர்கள் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றனர்.

2005-ம் ஆண்டு புலம் பெயர்ந்த தேசத்தில் ஆற்றும் கலைச் சேவையைப் பாராட்டி புதுச்சேரியில் எனக்கு ‘கலைஞானமணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இலங்கையில் புனர்வாழ்வு பள்ளிக் கட்டிடம் கட்டு
வதற்கு 2006-ம் ஆண்டில் ‘நர்த்தனநாதம்’ என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தேன். நாட்டியம் பயில்வோருக்காக ‘குறுந்தகடுகள்’ வெளியிட்டு இருக்கிறேன். எனது மாணவர்களில் இதுவரை ஐந்து பேர் நடன ஆசிரியர்களாக உருவாகி இருக்கிறார்கள்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

போர்ச் சூழலால் அகதியாகப் புலம்பெயர்ந்து வந்த நான், வாழவந்த தேசத்தில் உள்ள எல்லா தமிழ்க் குழந்தைகளுக்கும் பரதக் கலையை கொண்டு சேர்க்க வேண்டும். இங்குள்ள இளைய தலைமுறைக் குழந்தைகளிடம் எங்கள் மண்ணின் வீரத்தையும், வரலாற்றையும், போர்த் திறனையும் கொண்டு சேர்ப்பதே எனது லட்சியம். 

நமது கலையை இங்குள்ள மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக, அவர்கள், மொழிப் பாடலுக்கு நடனமாடும் ஒரு முயற்சியைச் செய்து வருகிறேன். யோகாக் கலையை பிற நாட்டினருக்கு கொண்டு சேர்த்தது போல, பரதக் கலையின் சிறப்பையும் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களையும் நாட்டியம் கற்க வைக்க வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம். 

Next Story