பார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்


பார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்
x
தினத்தந்தி 8 Oct 2021 5:21 PM IST (Updated: 8 Oct 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

‘முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கிறேன்’ என்று பலரும் பாராட்டியதால், எனது பொம்மைகளை ‘எக்ஸ்ப்ரசிவ் டால்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்கிறேன்.

அமெரிக்காவில் வசிக்கும் பிரியா ஸ்ரீராம், வெளிநாட்டு பொம்மைகளான பார்பி - கென் பொம்மைகளை கடவுள் உருவங்களாக உருமாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். அவருடன் ஒரு சந்திப்பு..

பார்பி பொம்மைகளை தெய்வங்களின் உருவங்களாக மாற்றும் எண்ணம் எப்படி வந்தது?

பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே சென்னையில் தான். திருமணத்திற்குப் பிறகு, 2009-ம் ஆண்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேறிேனன். அங்கு வண்ணமயமான நம் நாட்டுப் பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாட முடியாது என்பது குறையாகவே இருந்தது. 

கொலு வைத்து நவராத்திரி விழாவைக் கொண்டாட நினைத்தபோது, அதற்கான கொலு பொம்மைகள் எளிதில் கிடைக்கவில்லை. அப்போது தான், வீட்டில் இருந்த பார்பி பொம்மைகளைக் கொண்டு கொலுவுக்கான பொம்மைகளைத் தயாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

சிறு வயதில் பார்பி பொம்மைக்குப் புடவை உடுத்தி விளையாடிய அனுபவம் இருந்ததால், வீட்டில் இருந்த கம்மல், பொட்டு, துணிகளைப் பயன்படுத்தி மடிசார் முறையில் புடவை அணிவித்தேன். 

அந்த பொம்மையைக் கொலுவில் வைத்தேன். கொலு பார்க்க வந்தவர்கள் பொம்மையைப் பார்த்து பாராட்டியதுடன், அவர்களுக்கும் அதுபோன்று செய்து கொடுக்கும்படி கேட்டார்கள்.

அன்று முதல், பார்பி பொம்மைகளை முருகன், வள்ளி, ஆண்டாள், கிருஷ்ணர், ராமர் என அனைத்து தெய்வங்களின் உருவங்களிலும் வடிவமைத்து விற்கத் தொடங்கினேன்.

அமெரிக்காவில் கொலு பொம்மைகள் தயாரிப்பதில் சந்திக்கும் சவால்கள் என்ன?

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் நவராத்திரி விழா கொண்டாடுகிறார்கள். இருந்தாலும், பொம்மைகளை அலங்கரிப்பதற்குத் தேவையான பட்டுத்துணி, மணிகள் போன்றவற்றைத் தேடி வாங்குவது கடினமாக இருந்தது. 

6 மாதங்கள் தேடிய பிறகே அலங்காரப் பொருட்கள் விற்கும் கடையைக் கண்டறிந்தேன். இறக்குமதி செய்து விற்பதால் பொருட்களின் விலையும் அதிகமாக இருந்தது.

அதன் காரணமாக, பொம்மைகளைத் தயார் செய்வதற்கான என்னுடைய ஊதியத்தைக் குறைத்துக்கொண்டு, பொம்மைகளை விற்பனை செய்கிறேன். இது தொழில் என்பதைத் தாண்டி, எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பொம்மைகள் மூலம் அமெரிக்காவில், இந்திய கலாசாரத்தை வளர்ப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறது. 

பார்பி பொம்மைகளை கடவுள் உருவங்களாக எவ்வாறு உருமாற்றம் செய்கிறீர்கள்?

பார்பி பொம்மைகளின் முக அமைப்பு ஒரே மாதிரியே இருக்கும். முருகன், கிருஷ்ணன், ராமர் போன்ற ஆண் தெய்வங்களுக்கு ‘கென்’ பொம்மை
களைப் பயன்படுத்துவேன். பொம்மைகளின் கண் மற்றும் வாய்ப்பகுதிகளுக்கு வண்ணம் தீட்டி, சிகை அலங்காரத்தில் மாற்றம் செய்து புது தோற்றத்தை உருவாக்குவேன். 

இதற்கு 5 மணி நேரம் ஆகும். ‘முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கிறேன்’ என்று பலரும் பாராட்டியதால், எனது பொம்மைகளை ‘எக்ஸ்ப்ரசிவ் டால்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்கிறேன். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் டெலிவரி செய்திருக்கிறேன்.

Next Story