மறுவாழ்வு தந்த ஏலக்காய் மாலை!


மறுவாழ்வு தந்த ஏலக்காய் மாலை!
x
தினத்தந்தி 11 Oct 2021 3:40 PM IST (Updated: 11 Oct 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

ஏலக்காயும், தங்கமும் ஒன்று. விலை நிலையானதாகவே இருக்காது. ஆடி மாதங்களில் காய் பறிப்பு குறைவாக இருக்கும். அந்த சமயத்தில், ஏலக்காய்களை வாங்கி சேகரித்து வைத்தால் அதன் நிறம் மங்கிவிடும். உப்பு நீரில் ஊறவைத்து சுத்தப்படுத்திய ஏலக்காய்கள், புகை போட்டு உலர்த்தப்பட்டே சந்தையில் விற்கப்படுகின்றன. புகை போடுவதால் ஏலக்காய்கள் மாலை தொடுப்பதற்குத் தகுந்தவாறு உறுதியாகிவிடும்

நறுமணங்களின் ராணியான ஏலக்காய், இந்திராணியின் வாழ்விலும் நறுமணத்தை பரப்பியுள்ளது. 

கணவரை இழந்து, கடன்களை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு மறுவாழ்வு அளித்தது, ஏலக்காய் மாலைகள் தொடுக்கும் தொழில்.

 அரசியல்வாதிகள் தொடங்கி அத்திவரதர் வரை சென்றடைந்துள்ள அவரது ஏலக்காய் மாலைகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“எங்களது சொந்த ஊரான போடிநாயக்கனூர், ஏலக்காய் சாகுபடிக்கு பெயர் பெற்றது. என்னுடைய கணவர் ஏலக்காய் மாலை தொடுக்கும் தொழில் செய்து வந்தார். 

அன்பான, அமைதியான குடும்பமாக வாழ்ந்து வந்தோம். அவருக்குக் கல்லீரல் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தார். எனக்கு வாழ்வே இருண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கணவரது மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் கண் முன் நின்றது. என் ஒரே மகனை ஆளாக்க வேண்டிய பொறுப்பும் எனக்கிருந்தது. அதனால் ஏலக்காய் மாலை தொடுக்கும் தொழிலைக் கையில் எடுத்தேன்” என்றார் இந்திராணி.

காலத்தின் கட்டாயத்தால் மாலை தொடுக்கத் தொடங்கியவர், ஓய்வின்றி உழைத்தார். சிறு சிறு ஆர்டர்கள் கிடைத்து வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அவரது அழகிய மாலைகளைத் தேடி வரத் தொடங்கினர்.

 கோவில்களில் சாமி சிலைகளுக்குச் சூட்டுவதற்கும், அரசியல் தலைவர்களைக் கவுரவப்படுத்துவதற்கும், அவருடைய ஏலக்காய் மாலைகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்தன. அதோடு, அவரது கவலைகளும் கரையத் தொடங்கின.

“ஏலக்காய்களின் நகரம் போடி நாயக்கனூர் என்பதால், மாலைகளுக்கு ஏற்ற சரியான பருவத்தில் ஏலக்காய்கள் சுலபமாகக் கிடைக்கும். ஏலக்காயும், தங்கமும் ஒன்று. விலை நிலையானதாகவே இருக்காது. 

ஆடி மாதங்களில் காய் பறிப்பு குறைவாக இருக்கும். அந்த சமயத்தில், ஏலக்காய்களை வாங்கி சேகரித்து வைத்தால் அதன் நிறம் மங்கிவிடும். உப்பு நீரில் ஊறவைத்து சுத்தப்படுத்திய ஏலக்காய்கள், புகை போட்டு உலர்த்தப்பட்டே சந்தையில் விற்கப்படுகின்றன. 

புகை போடுவதால் ஏலக்காய்கள் மாலை தொடுப்பதற்குத் தகுந்தவாறு உறுதியாகிவிடும்.

தொடக்கத்தில் இதைப்பற்றி எதுவும் தெரியாமல் சிரமப்பட்டேன். அனுபவம் அனைத்தையும் கற்றுக்கொடுத்தது. மாதத்திற்கு 50-க்கும் மேற்பட்ட மாலைகளைத் தொடுத்துக் கொடுக்கிறேன். 

கொரோனா பொது முடக்கத்தின் போது தொழில் அதிகம் பாதிக்கப்பட்டது. அந்த சமயங்களில் புதுப்புது டிசைன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். 

அவ்வாறு, பொது முடக்கத்தின்போது ஏலக்காயில் வடிவமைக்கப்பட்ட மணமக்களுக்கான கல்யாண மாலை இப்போது டிரெண்டிங்காக உள்ளது.
ஏலக்காய்களுக்கு இடை இடையே மணிகள், செயற்கையான பூக்கள் போன்றவற்றை இணைத்தால், மாலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எனக்கு அங்கீகாரம் அளித்ததும் என் கற்பனை திறனால் நான் வடிவமைத்த அந்த மாலைகள்தான். 

எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஏலக்காய் மாலை செய்து கொடுத்திருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில், எப்போதும் என்னுடைய மாலை அணிவிக்கப்படும். அத்தி வரதருக்கும் 21 அடியில் ஏலக்காய் மாலை செய்து கொடுத்தேன்.

இப்போது, கடனை எல்லாம் அடைத்து மகனையும் படிக்க வைத்திருக்கிறேன். 20 பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்” என்று கூறி முடித்தார் இந்திராணி. 

Next Story