நவீன ஓவியங்கள், கற்பனைகளின் திறவுகோல்கள் - சின்மயா தேவி


நவீன ஓவியங்கள், கற்பனைகளின் திறவுகோல்கள் - சின்மயா தேவி
x
தினத்தந்தி 11 Oct 2021 5:23 PM IST (Updated: 11 Oct 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

மனதிற்குப் பிடித்தவற்றைக் கற்பனைக்கு உட்படுத்தி வரைகிறேன். இந்த வசதியை நவீன ஓவியங்கள் தான் தருகின்றன. இவைதான் கற்பனைகளின் திறவுகோல்கள்

“ஓவியம் என்பது வரைபவருக்கு மட்டுமில்லாமல், பார்ப்பவருக்கும் மன நிறைவைத் தரும்” என்று கூறுகிறார் சின்மயா தேவி. 

புதுச்சேரியைச் சேர்ந்த இவர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் தனது ஓவியங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறார்.

சின்மயா தேவி அகமதாபாத்தில் இளநிலை டிசைனிங் படிப்பை முடித்துள்ளார். குஜராத்தில் பிரிண்ட் டிசைனிங், சர்பேஸ் டிசைனிங்கில் கலக்கியவர், ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு அக்ரலிக் ஓவியங்கள் மேல் தீராத ஆர்வம் கொண்டு வரைந்து  வருகிறார். 

தான் காணும் இயற்கை சார்ந்த பொருட்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை உள்வாங்கி ஓவியங்கள் வரைகிறார். அவரது ஓவியங்கள், கடந்த சில ஆண்டுகளாகப் புதுச்சேரியில் சில பள்ளிகளின் சுற்றுச்சுவர்களை அலங்கரித்து வருகின்றன. அவருடன் பேசினோம்.

“மனதிற்குப் பிடித்தவற்றைக் கற்பனைக்கு உட்படுத்தி வரைகிறேன். இந்த வசதியை நவீன ஓவியங்கள் தான் தருகின்றன. இவைதான் கற்பனைகளின் திறவுகோல்கள்” என்று கூறும் சின்மயா பல அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் சுவர் ஓவியங்களையும், பிரமாண்ட படங்களையும் வரைந்து இருக்கிறார்.

“என்னுடைய ஓவியங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி இருக்கும். ஏனெனில் அவர்களின் முகபாவங்களை, எண்ணங்களை எளிதாக அறிந்து கொள்ள முடியாது. 

முகத்தில் மென்சோகமும், புன்னகையும் கலந்த பெண்களைத் தினமும் பார்க்கலாம். அதனால் எனது ஓவியங்களை உற்றுக் கவனித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு பலரும் திண்டாடுவார்கள்.

கொரோனா காலம் முடிவடைந்ததும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் டெல்லியில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க விரும்புகிறேன்.
நான் வசிக்கும் பகுதிக்கு அருகே அரசுப்பள்ளி ஒன்று உண்டு. அங்கு சுவர் நல்ல நிலையில் இருந்தது. 

எனினும் அதைச் சுற்றி சில நேரம் குப்பைகள் கிடக்கும். அவை குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என உணர்ந்தேன். 

ஓவியம் வரைந்தால் அங்கு யாருக்கும் அசுத்தம் செய்ய தோன்றாது என்று நினைத்தேன். முன் அனுமதி பெற்று சில ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். 

சில நாட்களில் அப்பள்ளிக் குழந்தைகள் தங்களுக்கும் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருமாறு கேட்டார்கள். மாலை நேரங்களில் அரை மணி நேரம் ஓவியப் பயிற்சி அளித்தேன். ஒரு மாதத்தில் அவர்களும் நன்றாக ஓவியம் வரையத் தொடங்கினார்கள்.


எல்லோரும் இணைந்து பள்ளியின் சுற்றுச்சுவர் முழுக்க கல்வி சார்ந்த ஓவியங்கள் வரைந்தோம். அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் அந்தப் பகுதி மக்களும் மகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்தார்கள். 

நம் கலை அனைவருக்கும் பயன்பட வேண்டும்” என்றவருக்கு வசதி குறைந்த, பின் தங்கிய குழந்தைகளுக்காக ஓவியப் பள்ளியை இலவசமாகத் தொடங்கி நடத்த வேண்டும் எனும் கனவு இருக்கிறதாம். கனவு மெய்ப்பட வாழ்த்துகள்..! 

Next Story