காகிதங்களில் கலை வடிவங்கள்


காகிதங்களில் கலை வடிவங்கள்
x
தினத்தந்தி 18 Oct 2021 11:56 AM GMT (Updated: 18 Oct 2021 11:56 AM GMT)

பெரிய அளவில் இடம், பணம், இதர கருவிகள் போன்ற தேவைகள் இல்லாமல், வண்ண காகிதங்களை மட்டும் கொண்டு வீட்டிலேயே சுலபமாக விரும்பும் வடிவங்களில் காகித கத்தரிப்பு மூலம் பல வடிவங்களை உருவாக்க முடியும்.

காகிதங்களை கத்தரிப்பதன் மூலம் ‘ஜியான்ஸி’ என்ற அலங்கார வடிவங்களை உருவாக்கும் கலை, சீனாவில் பிரபலமாக உள்ளது. இந்த முறையில் காகிதங்களை பல அடுக்குகளாக வைத்து அதை வடிவியல், விலங்குகள் மற்றும் மனித உருவங்கள் கொண்டதாக வெட்டுகிறார்கள். இத்தகைய அலங்கார முறை சீன கலாசாரத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் ஒன்றாகும். மூதாதையர்களையும், கடவுள்களையும் வணங்குவதற்கான பண்டைய நம்பிக்கைகளிலிருந்து இக்கலை உருவானது.
 

சீனாவில் உள்ள கிழக்கு ஹான் வம்சத்தைச் சேர்ந்த சாய்லுன் என்பவரால் முதலில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சீனர்களின் காகித கத்தரிப்பு கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்தக் கலை வடிவம், தற்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. உலகின் வெவ்வேறு நாடுகள் தங்கள் சொந்த கலாசார பாணியை அந்தக் கலையுடன் இணைத்துக்கொண்டு தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து கொண்டன. 

சீனாவின் பாரம்பரியம் மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் நிறமாக சிவப்பு உள்ளது. ‘சிவப்பு’ என்பது சீன கலாசாரத்தில் பண்டிகைகள் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. அதன் அடிப்படையில், காகித கத்தரிப்பு கலையிலும் சிவப்பு காகிதங்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கொண்டு சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், தூண்கள், விளக்குகள் ஆகியவற்றை அலங்கரிக்கிறார்கள்.

சீனர்களின் நம்பிக்கைப்படி காகிதங்கள் அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் குறிக்கின்றன. அதனால், காகித கலைப் படைப்புகள் வசந்த விழா, திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளில் பரிசாக அளிக்கப்படுகின்றன. குறிப்பாக சீன புத்தாண்டு மற்றும் ஒருவரது திருமண நாள் ஆகியவற்றுக்கான பரிசுகளில் இந்தக் காகித கலைப் படைப்புகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.



நுட்பமான வடிவியல் கலைப் படைப்புகள் என்றாலே அவற்றில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் காகித கத்தரிப்பு கலையிலும், உலக அளவில் பெண்களே அதிகமான பங்களிப்பை அளித்து வருகின்றனர். 

பெரிய அளவில் இடம், பணம், இதர கருவிகள் போன்ற தேவைகள் இல்லாமல், வண்ண காகிதங்களை மட்டும் கொண்டு வீட்டிலேயே சுலபமாக விரும்பும் வடிவங்களில் காகித கத்தரிப்பு மூலம் பல வடிவங்களை உருவாக்க முடியும். 

அதனால், சீனப் பெண்களின் முக்கியமான பொழுது போக்காக இது உள்ளது. அவர்கள், தங்கள் வீடுகளை விதவிதமாக அலங்காரம் செய்வதுடன், வர்த்தக நோக்கில் செயல்பட்டு, இணையவழி தொடர்புகள் மூலம் சர்வதேச நாடுகளுக்கும் காகித கலைப்படைப்புகளை அனுப்பி வருகிறார்கள்.

காகித கத்தரிப்பு கலையில் புதுமைகளைப் புகுத்தி அதைக்கொண்டு விழாக்காலங்களில் இல்லத்தரசிகள் தங்கள் வீட்டை அழகுபடுத்தலாம். இன்றையச் சூழலில் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் கலையை 
வர்த்தக வாய்ப்பாகவும் மாற்றிக்கொள்ள முடியும். 

Next Story