கைவினை கலை

மெஹந்தி வரைவதன் மூலம் வாழ்வில் முன்னேறிய பிரியா + "||" + Mehndi is a art, for me successful profession- priya prabhakaran

மெஹந்தி வரைவதன் மூலம் வாழ்வில் முன்னேறிய பிரியா

மெஹந்தி வரைவதன் மூலம் வாழ்வில் முன்னேறிய பிரியா
வீட்டில் இருந்து தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ஸ்டால் அமைத்து கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பிரியா பிரபாகரன். தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக ஓய்வு நேரத்தில் மெஹந்தி வரைய ஆரம்பித்தவர், அதையே தனது தொழிலாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் கலையை பிறருக்கு கற்றுக்கொடுத்தும் வருகிறார். தனது வெற்றி பயணம் குறித்து நம்முடன் பகிர்கிறார்.

“நான் இளங்கலை தகவல் தொழில்நுட்பவியல் படித்திருக்கிறேன். பெற்றோர் முருகேசன்-யோகராணி, தங்கை பிருந்தா. என் கணவர் பிரபாகரன். எனது தந்தை இறந்துவிட்டார். அம்மா தனியாக எங்களை வளர்த்தார். சிறுவயதில் இருந்தே பொருளாதார ரீதியாக நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன்.

நான் நன்றாகப் படிப்பவள். அம்மாவின் ஆதரவுடன் பள்ளியில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டேன். அம்மாவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் மெஹந்தி வரைவதற்கு கற்றுக் கொண்டேன்.கல்லூரியில் 2-ம் வருடம் படிக்கும்போது மெஹந்திப் போட்டியில் வெற்றி பெற்றேன். இதற்காக நான் எந்தப் பயிற்சி வகுப்பிற்கும் செல்லவில்லை. என்னுடைய சொந்த ஆர்வத்தில் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். அதைப் பார்த்து, பேராசிரியர்கள் அவர்களது குடும்ப விழாக்களில் மெஹந்தி போடுவதற்கு அழைக்க ஆரம்பித்தனர். அதன் மூலம் பலருக்கும் மெஹந்தி வரைந்து கொடுத்தேன்.

பின்பு மெஹந்தி வரைவதை முழுநேரத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். அரசியல் தலைவர்களின் இல்லத் திருமண விழாக்களிலும் மெஹந்தி வரைந்திருக்கிறேன். மெஹந்தி போடுவதற்கான மருதாணிக் கலவையை இயற்கையான பொருட்களைப் பயன் படுத்திதான் தயாரிக்கிறேன்.

மெஹந்தி வரைவதைக் கற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். எனது கணவர் எனக்கு முழு ஆதரவாக இருந்து வருகிறார்.

எனது பயிற்சி வகுப்பில் கன்னியாகுமரி, நாகர்கோவில், நெய்வேலி, தஞ்சாவூர், சேலம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இணையதளம் மூலமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

சொந்தமாக வீடில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் இந்தத் தொழில் மூலம் சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறேன். இதுவே எனது சாதனையாக நினைக்கிறேன்.செய்யும் வேலையை மிகவும் ரசிப்போடும், விருப்பத்தோடும் செய்வதால் அதற்குத் தகுந்தாற்போல நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறேன். ‘தி ரியல் உமன் அவார்டு’, ‘அவுட் ஸ்டாண்டிங் என்டர்பிரனர்’, ‘சுய சக்தி விருது’, ‘சவுத் இந்தியன் உமன் அச்சீவர்’ போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

வீட்டில் இருந்து தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ஸ்டால் அமைத்து கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.

நமக்கு என்ன தெரியுமோ அதை மன தைரியத்துடன் தொடர்ந்து செய்ய வேண்டும். நமது திறமை வெளியில் தெரிய ஆரம்பிக்கும்போது வெற்றி நிச்சயம். எந்தத் தொழிலாக இருந்தாலும் முழு முயற்சியுடன் செய்ய வேண்டும்” என்கிறார் பிரியா பிரபாகரன்.