எம்பிராய்டரியில் மாற்றி யோசித்து வெற்றிகண்ட அமுதசுதா
இன்றைய இளைஞர்கள் கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணத்தில் வித்தியாசமாக, அதே நேரத்தில் நம்முடைய நினைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பரிசுகள் வழங்குவது தற்போது அதிகம் விரும்பப்படுகிறது.
குழந்தைப்பேறு காலத்தில் தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என நினைத்தார் தஞ்சாவூரைச் சேர்ந்த அமுதசுதா. சிறுவயதில், தன்னுடைய பாட்டி எம்பிராய்டரி செய்வதைத் தொடர்ந்து கவனித்து வந்தவர், அவரிடமிருந்து எம்பிராய்டரி கலையைக் கற்றுக் கொண்டார். இன்றைய இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதனை மெருகேற்றி தன்னை தொழில்முனைவோராக நிலைநிறுத்தி இருக்கிறார்.
அவரது பேட்டி...
‘‘கட்டிட வடிவமைப்பு படித்து முடித்துவிட்டு, நான்கு ஆண்டுகள் தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். பின்பு, திருமணம் முடிந்ததும் முழுநேரமும் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டேன். குழந்தைப்பேறு காலத்தில் என்னுடைய நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று புத்தகம் வாசிப்பது, எம்பிராய்டரி செய்வது போன்றவற்றில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்து எம்பிராய்டரி ஓவியங்கள் உருவாக்க ஆரம்பித்தேன்.
தொடக்கத்தில் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவற்றை பரிசாக வழங்கினேன். அதனைப் பார்த்து பலர் விரும்பி என்னிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதன் காரணமாக, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் இணையவழியில் தொழில் தொடங்கினேன்.
இன்றைய இளைஞர்கள் கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணத்தில் வித்தியாசமாக, அதே நேரத்தில் நம்முடைய நினைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பரிசுகள் வழங்குவது தற்போது அதிகம் விரும்பப்படுகிறது.
இதில் எனக்கான தனித்துவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக எண்ணினேன்.எனவே இயந்திரத்தின் மூலம் எம்பிராய்டரி செய்யாமல், கையால் மட்டுமே பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.
எம்பிராய்டரி ஹூப்பில் வரும் ஓவியங்களைக்கூட, நானே வரைந்து வடிவமைக்கத் தொடங்கினேன். அதற்காக அதிக நேரம் செலவிட்டாலும் பலரிடமிருந்து பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்தது.
மற்ற மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் பெற்று செய்து தருகிறேன்.
ஒன்றரை வயதுக் குழந்தையை கவனித்துக்கொண்டு, இதற்கும் அதிகநேரம் செலவிடுவது சவாலானது. இருப்பினும் பிடித்தவற்றை செய்யும்போது நமக்கான தனித்துவத்தைப் பெறலாம் என்ற ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் நேரத்தை செலவிட்டு வருகிறேன்.
என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். குடும்பத்தினரின் புரிதலும், அவர்கள் அளிக்கும் நம்பிக்கையுமே நம்மை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்.
எம்பிராய்டரியைப் பொறுத்தவரை ஆர்வமும், கற்பனைத் திறனும், பொறுமையும் அவசியம். இதற்கான வழிகாட்டியாகத் தொடர வேண்டும் என்பதே என்னுடைய கனவு’’ என்கிறார் அமுதசுதா.
Related Tags :
Next Story