நம்பிக்கை நாயகி நாகலட்சுமி
எங்கள் குறும்படங்கள் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியோர்களின் பார்வைக்குச் சென்று, இன்று பல லட்சம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மதுரை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் வளரும் இளம் தலைமுறையினருக்கு, யூடியூப்பில் வீடியோ வழியாக வாழ்வியல் கருத்துக்களைக்கூறி வருகிறார். தனது தளத்திற்குப் பல லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இவரது வீடியோப் பதிவை பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். தன்னைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நாகலட்சுமி.
“எங்கள் குடும்பத்தில் ஐந்து பெண் குழந்தைகள். நான் கடைக்குட்டி. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த எனக்கு பன்னிெரண்டாம் வகுப்பு முடித்த உடனே திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்குப் பின்பு, கணவருடன் சேர்ந்து மளிகைக்கடை நடத்தி வந்தோம். இரண்டு மகன்கள் பிறந்தனர்.
அவர்கள் கல்லூரி செல்ல ஆரம்பித்தபோது கணவர் மரணம் அடைந்தார். பெட்ரோல் பங்க், பூங்காக்கள், பள்ளிகள் என பல இடங்களில் தின்பண்டங்கள் விற்றுப் பிள்ளைகளை வளர்த்தேன். பல சிரமங்களுக்கு இடையில் அவர்களை படிக்க வைத்தேன்.
மூத்த மகனுக்குத் திருமணம் நடத்தி வைத்தேன். என் கணவருக்கு இருந்த சினிமா ஆர்வம் இளைய மகனுக்கும் இருந்தது. அந்த ஆர்வத்தை அவன் வளரும் பருவத்திலிருந்தே ஊக்குவித்து வந்தேன்.
சினிமாத் துறையில் சேர்வதற்காக அவனை சென்னைக்கு அனுப்பினேன். கொரோனா பரவல் காரணமாக மதுரைக்கே திரும்பி வந்தான். அவன் மனம் தளரக்கூடாது என்பதற்காக குறும்படங்களை என்னை வைத்தே இயக்குமாறு கூறினேன்.
‘எப்படிம்மா உங்களை வைத்து குறும்படங்களை எடுப்பது?’ என்று கேட்டான்.
‘நாம் எடுக்கும் குறும்படங்கள் மூலம் சமூக சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்’ என்று சொன்னேன். என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி குறும்படங்கள் எடுத்தான்.
முதலில், ‘நாம் சொல்கின்ற கருத்துக்கள் மக்களைப் போய் சேருமா? நம்மை ஏற்றுக் கொள்வார்களா?’... என்ற தயக்கம் இருந்தது. நம்பிக்கை, தைரியம் கொண்டு செயலில் இறங்கினோம்.
எங்கள் குறும்படங்கள் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியோர்களின் பார்வைக்குச் சென்று, இன்று பல லட்சம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. எங்களது வீடியோ பதிவுகளை காவல் துறையினர், நடிகர்கள் உள்பட பலரும் பாராட்டியது பெருமையாக உள்ளது.
மதுரையில் தல்லாகுளத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் வேலை செய்து வருகிறேன். அங்கு வருகிற பொதுமக்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள்.
நடிகர் கமல் அவரது டுவிட்டர் பதிவில் எங்களது வீடியோவைப் பகிர்ந்தார். அவரைத் தொடர்ந்து மவுரியா ஐ.பி.எஸ். போன்றோரும் பகிர ஆரம்பித்தனர்.
மதுரை மாநகர காவல்துறையின் முகநூலில் எங்களது வீடியோ பகிரப்பட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘குட்டிக்கதைகள்’ என்ற தலைப்பில் தினமும் மாலை வேளையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது’’ என்கிறார் நம்பிக்கை நாயகி நாகலட்சுமி.
Related Tags :
Next Story