கணவரைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்
திருமணத்திற்கு முன்பே இருவரின் எதிர்காலக் கனவுகள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என அனைத்து விஷயங்களையும் பேசி, தெளிவு படுத்திக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமானால், இருவருக்குள்ளும் அடிப்படையான புரிதல் இருக்க வேண்டும். இருவரில் யாருக்கு புரிதல் குறைந்தாலும், குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி குறைந்துவிடும். இந்த அடிப்படையை மேம்படுத்த முதலில் மனைவி கணவரைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
மனம் விட்டுப் பேசுங்கள்:
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, இருவருக்குள்ளும் எந்தவித ரகசியமும் இல்லாமல், மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாகப் பேசுவதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அஸ்திவாரம். கணவனின் செய்கையில் ஏதாவது சந்தேகம் எழும்போது அதை மனதில் வைத்தே பிரச்சினையைப் பெரிதாக்காமல், உடனடியாகப் பேசி, கணவன் தரப்பு நியாயத்தை கருத்தில் கொண்டு தீர்வு காணுங்கள். அதேபோல், கணவனுக்கு எழும் சந்தேகத்தையும், மனைவி தீர்க்க வேண்டியது கடமை. இதற்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, மனம் விட்டுப் பேசுங்கள். இதில், இருவரின் கருத்தையும் மகிழ்ச்சியாகப் பகிருங்கள்.
மரியாதை கொடுங்கள்:
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருவருக்கும் சம மரியாதை கிடைக்க வேண்டும். கணவர் வீட்டில் இருந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும், உரிமையையும் சரியாகப் பெற்றிடுங்கள். அதேபோல் கணவருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையைத் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் பேசும் வார்த்தை, முதியவர்களைப் பராமரிக்கும் முறை, குடும்பத்தை வழி நடத்திச் செல்வது என அனைத்தும் அடங்கும். உங்கள் கடமையை சரியாகப் புரிந்து செயல்பட்டால், கணவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விடலாம்.
உணர்வுகளை மதியுங்கள்:
பல பெண்கள் தங்களின் எதிர்கால கனவுகளைக் கணவர் புரிந்துகொண்டு நிறைவேற்ற வேண்டும் என விரும்புகின்றனர். அதேபோல்தான், கணவருக்கும் எதிர்காலக் கனவுகள் இருக்கும். அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை திருமணத்திற்கு முன்பே இருவரின் எதிர்காலக் கனவுகள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என அனைத்து விஷயங்களையும் பேசி, தெளிவு படுத்திக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் பரிபூரண அன்பையும் பெற முடியும். அதேபோல், கணவரின் ஒவ்வொரு வெற்றியையும், அதற்கான முயற்சியையும் மதித்து பாராட்டுங்கள், ஊக்கப் படுத்துங்கள்.
வாக்குவாதம் வேண்டாம்:
கணவரிடம் ஒரு விஷயம் குறித்த சந்தேகத்தைத் தீர்க்க முயலும்போது, அன்பான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துங்கள். எந்த இடத்திலும், கோபமான வார்த்தைகளையோ, வெறுப்புணர்வையோ வெளிப்படுத்தாதீர்கள். இது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். பெண்கள் இந்த விஷயத்தில், கணவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு செயல்படும்போது, அவரின் அன்பை பெறலாம்.
நிதானம் அவசியம்:
எதிர்பாராமல் தம்பதிக்குள் சண்டையிட நேரிட்டாலும், குடும்பத்தை வழிநடத்தி செல்ல வேண்டிய பெண்கள் இதில் நிதானமாகச் செயல்பட வேண்டும். சண்டை பெரிதாகும் எனத் தெரிந்தால், முதலில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். இரண்டாவது, பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்த வழி தேடுங்கள். அத்துடன் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை இரு தரப்பு பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாரிடமும் பகிராமல், சம்பந்தப்பட்ட இருவருமே தீர்க்க முயலுங்கள்.
nமற்றவர்களிடம் தெரிவிக்கும்போது தம்பதிக்குள் பிரிவைத்தான் ஏற்படுத்தும். வாழ்நாள் முழுவதும் கைக்கோர்த்து நடக்கும் வாழ்க்கைத்துணையைச் சரியாகப் புரிந்து கொண்டால், மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.
Related Tags :
Next Story