மூன்றாம் நபரால் உறவுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சரி செய்யலாம்?
உங்கள் துணையிடம் மூன்றாவது நபரைப் பற்றிக் கூறுங்கள். அவர் பேசுவதையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுப்படுத்துங்கள்.
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்தல் அவசியமாகும். இருவருக்குள் குழப்பம், சந்தேகக் கண்ணோட்டம், நம்பிக்கை இன்றி இருத்தல் போன்றவற்றால், மூன்றாவது நபர் அவர்களின் உறவுக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படும். மூன்றாவது நபர் என்பவர், உங்களது அல்லது உங்களின் துணையின் நெருங்கிய நண்பர், பெற்றோர், உடன்பிறந்தோர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். காலங்கள் செல்லச்செல்ல மூன்றாவது நபரால் உங்கள் உறவில் பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மன நிம்மதியின்மை ஏற்படும். இதற்கான தீர்வுகள் இங்கே...
பிரச்சினையை புரிந்துகொள்ளுங்கள்:
இருவருக்கும் இடையே பிரச்சினை தொடங்கியதற்கு காரணம் என்ன? தற்போதைய சூழ்நிலை என்ன? மூன்றாவது நபர் வேண்டுமென்றோ அல்லது எந்த நோக்கமுமின்றி தற்செயலாகவோ உங்கள் உறவின் இடையில் வந்திருக்கலாம், இதில் மூன்றா வது நபரின் நோக்கம் என்ன? என்று தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.
மூன்றாவது நபரை தள்ளிவையுங்கள்:
மூன்றாவது நபரிடம் அவரால் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் சூழ்நிலையைப் பக்குவமாக, அவர் மனம் புண்படாத வகையில் எடுத்துக் கூறுங்கள். அது மட்டுமல்லாமல், இனி அவர் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ? அதை பொறுமையாகக் கூறுங்கள். சில நேரங்களில், மூன்றாம் நபருக்கு நம் நேரத்தையும், முக்கியத்துவத்தையும் கொடுப்பது, அவரை இன்னும் தூண்டிவிடச் செய்துவிடும். அதனால் அவரை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணியுங்கள். புறக்கணிப்பது மட்டுமே, சூழ்நிலையை நாகரிக வழியில் கையாள உதவும்.
உங்கள் துணையிடம் பேசுங்கள்:
நிலைமை கைமீறிப் போவதற்கு முன், உங்கள் துணையிடம் பேசுவது அவசியமாகும். உங்கள் துணையிடம் மூன்றாவது நபரைப் பற்றிக் கூறுங்கள். அவர் பேசுவதையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுப்படுத்துங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாமல், உறவை பாதுகாப்பதற்கான வழியைத் தேர்ந்தெடுங்கள். உங்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தோன்றினால், உங்கள் துணையிடம் மூன்றாவது நபரை கையாளச் சொல்லுங்கள்.
கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்:
சில சமயம், பேச்சுவார்த்தையின்போது கோபம் வரலாம். அந்த நேரத்தில் சொல்லக்கூடாத வார்தைகளைக் கொட்டிவிடாதீர்கள், நிதானமாக யோசித்தப்பின் பேசுங்கள். இல்லையென்றால் அந்த வார்த்தைகள் ஆறாத வடுவாக, உங்கள் துணையின் மனதில் பதிந்துவிடும். பிரச்சினையும் வளர்ந்து கொண்டே போகும்.
மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும்:
நாம் அறியாமையால் செய்த தவறால்கூட மூன்றாம் நபரால் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதனால் செய்த தவறுக்காக உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். அதே சமயம் அன்பு செலுத்தி, தன் துணை செய்த தவறை மன்னிக்கும் குணமும் இருவருக்கும் இருக்க வேண்டும். ஒருவரை நல்வழிப்படுத்தி, அரவணைத்து கூட்டிச்செல்லும் வலிமை மன்னிப்பதற்கும், அன்பிற்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Related Tags :
Next Story