அன்றாட வேலைகளை எளிதாக செய்து முடிப்பதற்கான ஆலோசனைகள்


அன்றாட வேலைகளை எளிதாக செய்து முடிப்பதற்கான ஆலோசனைகள்
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM (Updated: 23 April 2022 12:15 PM)
t-max-icont-min-icon

தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கு தெளிவான தொடர்பு முறை அவசியமானது. பேசும்போதும், ஏதேனும் ஒன்றை மற்றவருக்கு விளக்கும்போதும் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ல்லத்தரசிகள், வீட்டில் இருந்தே பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என யாராக இருந்தாலும், திட்டமிட்டு செயல்படுவது முக்கியமானது. கடினமாக உழைப்பதைவிட, புத்திசாலித்தனமாக உழைப்பது சிறந்தது. அதற்கு ஏற்றவகையில், நமது அன்றாட வேலைகளை எவ்வாறு எளிய முறையில் செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

செய்யும் வேலையை விரும்பிச் செய்வது, அதை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடிப்பதற்கு உதவும்.

ஒரு வேலையை செய்வதன் மூலம், உங்களுக்கு நிச்சயமான பலன் உண்டு என்றால் அதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதன் விளைவாக மற்ற வேலைகளை செய்வதற்கான உற்சாகம் உண்டாகும். நேரத்தை அதிகமாக செலவிட்டாலும் பெரிதாக பலன் இல்லாத வேலைகளை இறுதியாகச் செய்யுங்கள்.

வேலைகளை சுமுகமாக செய்து முடிப்பதற்கு திட்டமிடுதல் அவசியம். அதே சமயம் அதிகமாக திட்டமிடுவது வேலைகளுக்கான நேரத்தைக் குறைத்து மனஅழுத்தத்தை உண்டாக்கும். மேலும் ஒரே 
நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திட்டத்தையும் தவிர்க்கவும். பின்பற்றக்கூடிய வகையிலான திட்டங்களை மட்டும் தீட்டவும்.

வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டம் தீட்டி, நேரம் ஒதுக்கி செயல்படும்போது, உங்கள் பட்டியலில் இல்லாத வேலைகள் திடீரென வந்தால், அவற்றை ஆராய்ந்து தள்ளி வைப்பதே சிறந்தது. மாறாக, அந்த வேலையையும் சேர்த்துக்கொண்டால், நீங்கள் திட்டமிட்ட மற்ற வேலைகளை முடிப்பது சிரமமாகும்.

நீங்கள் மேற்கொள்ளும் வேலைக்கான விவரங்கள் உங்களுக்கு புரியாதபோது, அவற்றை சம்பந்தப்பட்ட நபரிடம் மீண்டும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வேலையை புரியாமல் செய்யும்போது, நேரம் வீணாகுவதுடன், வெற்றியும் கிடைக்காமல் போகும். மேலும் தேவையற்ற சந்திப்புகள், பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்ப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.

தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கு தெளிவான தொடர்பு முறை அவசியமானது. பேசும்போதும், ஏதேனும் ஒன்றை மற்றவருக்கு விளக்கும்போதும் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
திட்டமிட்ட வேலையை வெற்றிகரமாக செய்வதற்கு, அவற்றை பகுதிகளாகப் பிரித்து தகுந்தவர்களிடம் ஒப்படைக்கலாம். இதன் மூலம், மற்றவர்களின் பணிகளைக் கற்றுக்கொள்ள முடியும்.

எல்லா நாளும் ஒரே மாதிரியான உத்வேகத்தில் பணிகளைச் செய்வது கடினம். திட்டமிட்ட பணிகள் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான ஆற்றலை உங்களால் செலவிட முடியாது. எனவே அதை எண்ணி மனஅழுத்தம் கொள்ளாதீர்கள்.

வேலை செய்வதற்கு உட்காருவதற்கு முன்னால், அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் இருக்குமாறு எடுத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நேரம் மிச்சமாகுவதுடன், வேலையை எளிதாக செய்ய முடியும். 
1 More update

Next Story