“மெட்டி ஒலி லீலா எனக்காகவே அமைஞ்சது” - நடிகை வனஜா
நடிப்பு என்பதையும் தாண்டி, இப்போது வரையிலும் அதில் நடித்த அத்தனை பேரும் ஒரே குடும்பத்தினர் போலவே பழகி வருகிறோம். ‘லீலா’ கதாபாத்திரம் எனக்காக வடிவமைக்கப்பட்டது என்றுதான் இப்பொழுதும் நினைப்பேன்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் தடைப்பட்டதன் காரணமாக புது எபிசோடுகள் எல்லாம் நிறுத்தப் பட்டிருந்தன. இதன் விளைவாக பழைய மெகா ஹிட் தொலைக்காட்சி தொடர்களை சேனல்கள் ஒளிபரப்பின. அவ்வாறு ஆரம்பித்ததுதான் ‘மெட்டி ஒலி’ தொடரின் மறு ஒளிபரப்பு.
இப்பொழுதும் அதற்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறது. அதில் ஐந்து சகோதரிகளில் ஒருவராக ‘லீலா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வனஜா. தற்போது மற்ற தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா வாய்ப்புகள் என கவனம் செலுத்தி கொண்டிருப்பவரிடம் பேசினோம்.
‘மெட்டி ஒலி’க்கு இப்பொழுதும் ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறதே? எப்படி கிடைத்தது அந்த வாய்ப்பு?
‘மெட்டி ஒலி’ தொடர் தயாரித்த நிறுவனத்தின் மற்றொரு தொடரில் இதற்கு முன்பு நடித்திருந்தேன். அது முடியும் நேரத்தில் ‘மெட்டி ஒலி’ தொடரில் என்னை நடிக்க வைப்பதற்கு இயக்குநரிடம் கேட்டார்கள்.
அவ்வாறுதான் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. நடிப்பு என்பதையும் தாண்டி, இப்போது வரையிலும் அதில் நடித்த அத்தனை பேரும் ஒரே குடும்பத்தினர் போலவே பழகி வருகிறோம். ‘லீலா’ கதாபாத்திரம் எனக்காக வடிவமைக்கப்பட்டது என்றுதான் இப்பொழுதும் நினைப்பேன்.
முன்பெல்லாம், காலை 10 மணிக்கு ஆரம்பித்தால், இரவு 9.30 மணி வரைக்கும் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்களில் நடித்திருந்தேன். கிராமத்து பெண், குடும்பத்தலைவி என ஒவ்வொரு வேடமும் வித்தியாசமானதுதான். கவுதமி, சுகன்யா, குஷ்பு போன்றோருடன் நடித்திருப்பது நல்ல அனுபவம்.
இப்போது அதிகமாக நடிக்காததற்கு என்ன காரணம்?
தற்போது ‘ராஜாமகள்’ ‘அபியும் நானும்’ போன்ற தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதால், அதிக தொடர்களில் நடிப்பது இல்லை.
யூடியூப் சேனல் தொடங்கி இருக்கிறீர்களாமே?
ஆமாம். சமீபத்தில் தான் ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் நிறைய பேர் கமெண்ட்டில் ‘மெட்டி ஒலி - லீலா’ குறித்தும், அந்தத் தொடரில் மறக்க முடியாத நினைவுகள் குறித்தும் பேச சொல்கிறார்கள்.
மெட்டி ஒலியில் நடித்த எல்லோரையும் மீண்டும் ஒன்றாக பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்காக அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே அதற்கான வாய்ப்பு அமையும்
Related Tags :
Next Story