மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு + "||" + 50% reservation for women should be given - Seeman talk

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாச்சேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கட்சிக்கு எவ்வளவு தருவார்கள், சீட்டுக்கு எவ்வளவு தருவார்கள் என்று பார்த்து தான் சில கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தொகுதிக்கு என்ன செய்வார்கள் என பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். இந்திய வரலாற்றிலேயே பசுமை காக்கவும், குருதி கொடை செய்யவும் தனி தொண்டர் படை வைத்துள்ள கட்சி நாம் தமிழர் கட்சி. இந்த பகுதியில் மதுக்கடைகளை அகற்ற மக்களோடு போராடியவர், வேட்பாளர் ரேவதி. கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், கடைக்கு செல்லும் பெண்கள் மீண்டும் வீட்டிற்கு வருவார்களா? என்ற அச்சத்துடனே பெற்றோர்கள் உள்ளனர். பெண்கள் இரவில் வெளியே சென்று, வீட்டிற்கு திரும்பும் நிலை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ளதா? பெண்மையை போற்றவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகின்றது.

நாட்டில் சந்தன மரம் வெட்டியவன் காட்டில் என்றால், வாங்கியவன் எங்கே? அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? நாட்டில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாரத மாதாவுக்கு ஜே என்ற கோஷத்தை கைவிட வேண்டும். பெண்மையை காப்பது தான் உண்மையான ஆண்மை. இந்திய தலைவர்களின் பிள்ளைகள் யாராவது நாட்டை காக்க ராணுவத்தில் உள்ளார்களா?

தேர்தல் என்பது திருவிழா போன்று மாறிவிட்டது. இடைத்தேர்தல் என்றால் அனைத்து அமைச்சர்களும் வந்து ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்று தான் செயல்படுகின்றனர். இவர்கள் எப்படி மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், அடிப்படை தேவைகள் அறிந்து செயல்படுவார்கள். தேர்தலுக்கு தேர்தல் மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று தான் சிந்தித்து வருகின்றனர்.

சத்தியத்தின் பிள்ளைகளாக நாங்கள் உள்ளதால் ஒருநாள் நிச்சயம் வெல்வோம். நாட்டையும், வீட்டையும் பாதுகாப்பது தான் உண்மையான வீரம். குடிநீருக்கு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படாததால் குடிநீருக்காக மூன்றாம் உலகப் போர் விரைவில் நடக்க போகிறது. குடிநீருக்காக மக்களோடு இணைந்து குடங்களை ஏந்தி போராடுவோம். அதில் தலைமையாக நாங்கள் இருப்போம். நீர் நிலைகளை பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தொழில் வளர்ச்சியை மட்டுமே முன்னெடுத்துச் சென்ற நாட்டின் நிலை, தற்போது என்ன ஆகிவிட்டது? தொழில் வளர்ச்சி மட்டுமே நாட்டை வளர்ச்சியடைய வைக்காது. ராமநாதபுரத்தில் தற்போது ஒரு குடம் தண்ணீர் ரூ.50 என்றாலும், கொடுக்க அங்கே தண்ணீர் இல்லை. தற்சார்பு, பசுமை பொருளாதாரம் என்றால் என்ன? என்று மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கேபிள் டி.வி. கட்டணம் மட்டுமே. வாக்கு பெட்டியில் எந்த சின்னம் தெரியவில்லையோ, எந்த சின்னம் மங்கலாக தெரிகின்றதோ அதுவே உழவர் சின்னம்.

எனவே மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.