இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2019 1:35 PM IST (Updated: 15 July 2019 1:35 PM IST)
t-max-icont-min-icon

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நிகர சரிவு

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 777.16 புள்ளிகள் சரிவடைந்து 38,736.23 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 258.65 புள்ளிகள் இறங்கி 11,552.50 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நடப்பு வாரத்தில் மொத்த விலை பணவீக்கம், ஜூன் மாத வர்த்தக புள்ளிவிவரம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங் களை தீர்மானிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்த விலை பணவீக்கம்

இன்று (திங்கள்கிழமை) ஜூன் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இந்தப் பணவீக்கம் 2.45 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 3.07 சதவீதமாக இருந்தது.

மேலும் இன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு ஜூன் மாத சரக்குகள் ஏற்றுமதி பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. சந்தை வட்டாரங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் அம்சமாக இது இருக்கிறது. கடந்த மே மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரித்து 2,999 கோடி டாலராக இருக்கிறது. சரக்குகள் இறக்குமதி 4.31 சதவீதம் அதிகரித்து 4,535 கோடி டாலராக உள்ளது. அதனால் வர்த்தக பற்றாக்குறை 1,536 கோடி டாலராக உயர்ந்தது.

நிதி நிலை முடிவுகள்

கடந்த வாரத்தில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், டெல்டா கார்ப், கோவா கார்பன், ஸ்டீல் ஸ்டிரிப் வீல்ஸ், ஹாத்தவே கேபிள்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தமது ஜூன் காலாண்டு வளர்ச்சிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டன. நடப்பு வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், யெஸ் வங்கி, விப்ரோ, மைண்ட்ரீ, எச்.டீ. எப்.சி. ஏ.எம்.சி., ஆர்.பீ.எல். வங்கி, ஏ.சி.சி., தாபர் இந்தியா, இண்டிகோ, ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், பந்தன் வங்கி போன்ற பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட உள்ளன. குறுகிய கால அடிப்படையில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை அன்று வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் பற்றிய புள்ளிவிவரத்தை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட வாய்ப்பு உள்ளதால் அதுவும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக் கின்றன. கடந்த மே, ஜூன் மாதங்கள் தொடர்பாகவும், முதல் காலாண்டு (2019 ஏப்ரல்-ஜூன்) தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

பங்கு முதலீடு

நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் உலக நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னியப் பங்கு முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Next Story