ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியின் பரிதாபம் தொடருகிறது - டெல்லியிடமும் வீழ்ந்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியின் பரிதாபம் தொடருகிறது - டெல்லியிடமும் வீழ்ந்தது
x
தினத்தந்தி 7 April 2019 2:05 PM GMT (Updated: 7 April 2019 11:30 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடிமேல் அடிவாங்கி வரும் பெங்களூரு அணி நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடமும் ‘சரண்’ அடைந்தது.

பெங்களூரு,

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

வழக்கமாக சிவப்பு நிற சீருடை அணியும் பெங்களூரு அணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற உடையுடன் முதலில் பேட்டிங்கை தொடங்கினர். பார்த்தீவ் பட்டேலும், கேப்டன் விராட் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பார்த்தீவ் பட்டேல் 9 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 17 ரன்னில் வெளியேறினார். வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவும், சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலும் பெங்களூரு அணியின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஓரளவு துரிதமாக ரன் சேகரித்த மொயீன் அலி 32 ரன்களில் (18 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் இன்னொரு பக்கம் கேப்டன் விராட் கோலி நின்று கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 16 ஓவர் முடிந்திருந்த போது அவர் வெறும் 28 பந்துகளை மட்டுமே சந்தித்து இருந்தார். 17-வது ஓவரில் சந்தீப் லாமிச்சன்னேவின் சுழலில் 2 சிக்சர்களை ஓட விட்ட விராட் கோலி (41 ரன், 33 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சுக்கு இரையானார்.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ரபடா 21 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணியில் ஷிகர் தவான் டக்-அவுட் ஆனாலும் அடுத்து வந்த வீரர்கள் சமாளித்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். டிம் சவுதியின் ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை துரத்தியடித்த பிரித்வி ஷா 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிலை கொண்டு விளையாடி அரைசதம் அடித்ததோடு வெற்றிப்பாதைக்கும் வழிவகுத்தார். அவர் 67 ரன்கள் (50 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார்.

டெல்லி அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரபடா ஆட்டநாயகன் விருது பெற்றார். டெல்லி அணிக்கு இது 3-வது வெற்றியாகும். அதே சமயம் இந்த சீசனில் நொந்து போயுள்ள பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

கேப்டன்கள் கருத்து

தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நான் ஆட்டம் இழந்த தருணம் சரி கிடையாது. நான் கடைசி வரை களத்தில் இருந்திருந்தால் 25 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் என்பது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருந்தால் இந்த ஸ்கோர் கூட எதிரணிக்கு கடினமாகத்தான் இருந்திருக்கும். மொத்தத்தில் இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. முடிவு எப்படி இருந்தாலும் ஒரு அணியாக தொடர்ந்து உற்சாகமாக விளையாட வேண்டும். அனுபவித்து, உற்சாகமாக ஆடுவதை நிறுத்தி விட்டால் எஞ்சிய ஆட்டங்களிலும் சறுக்கல் தான் ஏற்படும். ’ என்றார்.

டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், ‘இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்தது. அதனால் அவசரப்படாமல் காத்திருந்து எனக்கு ஏதுவாக வந்த பந்துகளை விரட்டியடித்தேன். அவர்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். ஆடுகளம் இரு வித தன்மையுடையதாக இருந்தது. எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக ரபடா தனது கடைசி இரு ஓவர்களை வீசிய விதம் அருமையாக இருந்தது’ என்றார்.

கோலி மீது கம்பீர் தாக்கு

‘விராட் கோலிக்கு கேப்டன்ஷிப்பில் சாதுர்யம் இல்லை. ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வென்றுத்தராத நிலையில் கேப்டன் பதவியில் தொடருவதற்காக அவர் பெங்களூரு அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டில் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தவிப்பதை சுட்டி காட்டி கம்பீர் நேற்று பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், ‘விராட்கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கேப்டன்ஷிப்பில் அவர் ஒரு கத்துக்குட்டி தான். இன்னும் அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். தோல்விக்கு பவுலர்கை-ளை குறை சொல்வதற்கு பதிலாக அவர் முதலில் தன்னைத்தானே பழித்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றது நினைவு கூரத்தக்கது.

Next Story