ஐ.பி.எல். கிரிக்கெட்: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.
சார்ஜா,
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அந்த அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.
ரிஷப் பண்ட் 26 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக, ஆட்டம் மும்பை பக்கம் சென்றது. எனினும், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் பொறுப்புடன் ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தனர். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 33 (33) ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக டிரென்ட் பவுல்ட், ஜெயந்த் யாதவ், குருணல் பாண்ட்யா, நாதன் கூல்டர்-நைல், பும்ரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.
Related Tags :
Next Story