ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்:  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
x
தினத்தந்தி 3 Oct 2021 5:39 PM GMT (Updated: 3 Oct 2021 5:39 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.


துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய 49-வது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியன்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின.  இப்போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா ஆகியோர் களமிறங்கினர். சஹா டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து ஜேசன் ராய் 10 ரன்களுக்கு அவுட் ஆக, ஐதராபாத் அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷகிப் அல் ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஐதராபாத் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக  டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவருடன் விளையாடிய வெங்கடேஷ் 8 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.  அடுத்து விளையாடிய ராகுல் திரிபாதி (7), நிதீஷ் ராணா (25) ரன்களில் வெளியேறினர்.  கில், 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக் (18), மோர்கன் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 119 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Next Story